உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

அமைதியுடன் இருந்துவிட்டான். ஆகவே, அவன் இறந்தபின்னர் அந்நாட்டைத் தான் பெற்று ஆட்சிபுரியலாம் என்ற எண்ணம் இவன் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது என்பது ஒருதலை.

இனி, விசயாதித்தன் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் அரசகுமாரனாகிய இராசேந்திரன் யாது செய்து கொண்டிருந்தனன் என்பது ஆராய்தற்குரிய தொன்றாகும். அந்நாட்களில் சோழ இராச்சியத்தில் சங்கர வர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்தவன் இவன் அம்மானாகிய வீரராசேந்திர சோழன் ஆவன்'. அவன் பேராற்றல் படைத்த பெருவீரன். அவன் மேலைச்சளுக்கியரோடும் பிறவேந்த ரோடும் புரிந்த போர்கள் பலவாகும். இராசேந்திரன் அப்போர் களுள் சிலவற்றில் கலந்து கொண்டு தன் அம்மானுக்கு உதவி புரிந்து வந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியப்படுகின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சளுக்கியரோடு போர் நிகழ்த்தி வெற்றி பெற்று, தன்பால் அடைக்கலம் புகுந்த விசயாதித்தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில், நம் இராசேந்திரனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது'. அன்றியும், அவ்வேந்தன் கடாரத்தரசனுக்கு உதவிபுரியும் பொருட்டுச் சோழநாட்டிலிருந்து பெரும்படை யொன்றை அனுப்பிய நாளில் கடாரத்திற்குச் சென்ற தலைவர்களுள் அரசகுமாரனாகிய இராசேந்திரனும் ஒருவன் ஆவன்'. எனவே, விரராசேந்திரன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் இவனுக்குத் தொடர் பிருந்தமை உணரற்பாலது. ஆகவே, இவன் போரிற் சிறந்த வீரராசேந்திர சோழன் ஆட்சிக்காலம் கி. பி. 1063 - 1070.

1.

2. The Colas, Vol. II, pp. 5 and 6.

3. 'பரக்கு மோதக் கடாரமழித்த நாள் பாய்ந்து செம்புன லாடியு நீந்தியுங் குரக்கு வாதம் பிடித்த விதத்தினிற் குடியடங்கலுங் கூன்முது காணவும்'

(க.பரணி, 6 - தா, 18)

என்னுங் கலிங்கத்துப் பரணியிலுள்ள பாடலொன்றால் குலோத்துங்கன் கடாரத்தில் போர்புரிந்த செய்தி வெளியாகின்றது. ஆனால், இவனது மெய்க்கீர்த்திகளில் அச்செயல் குறிக்கப்படவில்லை. எனவே, இவனது ஆட்சிக்காலத்தில் அது நிகழவில்லை என்பது திண்ணம். ஆகவே, இவனது இளமைப் பருவத்தில் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படை யெழுச்சியில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர்புரிந்திருத்தல். வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.