உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

நாட்டுப் போர்க்களங்களில் உயிர் துறக்கும்படி நேர்ந்தது. அரசகுமாரர்களும் இறந்தனர். ஆனால், அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை. மேலைச் சாளுக்கியர் நகரங்கள் அழிந்தமை தான் அன்னோர் கண்ட பயன் எனலாம். இளமை முதல் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் குலோத்துங்கன், துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கே சோழ இராச்சியத்தைப் பரப்பவேண்டும் என்ற தன் மாமன்மார் எண்ணத்தைப் பின்பற்றி நடத்தற்குச் சிறிதும் விரும்பாமல் அதனை முற்றிலும் விட்டொழித் தான். ஆகவே, இராச்சியத்தை யாண்டும் பரப்புவதற்கு முயலுவதைப் பார்க்கிலும் குடிகளுக்கு நலம் புரிந்து அவர்கள் உள்ளத்தைக் கவர்வது தான் சாலச் சிறந்தது என்பது இவன் கருத்தாதல் வேண்டும். இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாகி ஆட்சிபுரியத் தொடங்கியவுடன் வேங்கி நாடும் இவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பது ஒருதலை. சோழ இராச்சியத்தின் வட வெல்லையிலிருந்த அவ்வேங்கி நாடும் இவனுக்குரியதாகி இவன் பிரதி நிதிகளின் ஆட்சிக்குட்படவே, வட புலத்தில் சோழர்களுக்கு வழிவழிப் பகைஞராகவிருந்த மேலைச் சளுக்கியரும் அந்நாட்டைக் கடந்து சோழ இராச்சியத்தின் மீது படையெடுப்பது இயலாதாயிற்று. எனவே இவன் ஆட்சியில் சோழ இராச்சியம் மிக்க அமைதியான நிலையை அடைந்தது எனலாம். இவன் ஆட்சிக்கால முதல் சற்றேறக் குறைய நூறாண்டுகள் வரையில் அத்தகைய அமைதியான நிலையிலேயே சோழ இராச்சியம் இருந்து வந்தமை அறியத்தக்கது இவனுக்குப் பிறகு அரசாண்ட இவன் புதல்வன் விக்கிரம சோழன், அவன் புதல்வன் இரண்டாங் குலோத்துங்க சோழன் அவன் புதல்வன் இரண்டாம் இராசராச சோழன் ஆகிய சோழ மன்னர்கள் இவன் கொள்கையைப் பின்பற்றி நடந்து வந்தமையால்தான் அன்னோர் ஆட்சிக் காலங்களில் சோழ இராச்சியம் உண்ணாட்டுக் குழப்பமும் வெளிநாட்டுப் படையெழுச்சியுமின்றி மிக்க அமைதியான நிலையில் இருந்து வந்தது என்று கூறலாம். எனவே, தனக்குப் பின்னரும் தன் இராச்சியத்தில் மக்கள் எல்லோருக்கும் அமைதியான வாழ்வு அமையுமாறு முதலில் விதையிட்டவன் பெருந்தன்மையும் பேராற்றலும் வாய்ந்த நம் குலோத்துங்கனே என்பது தெள்ளிது.