உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

29

ஒரு நாள் குலோத்துங்கன் காஞ்சிமாநகரிலுள்ள அரண்மனையில் சித்திரமண்டபத்தில் வீற்றிருந்தபோது, இவன் திருமந்திர ஓலைக்காரன் வந்து, திறைப் பொருளுடன் பல அரசர் கடைவாயிலின்கண் காத்துக்கொண்டிருத்தலை அறிவிக்கவே, இவன் அவர்களை உள்ளே விடுமாறு உத்தரவளித் தான், உடனே அவர்கள் வந்து இவனைப் பணிந்து தாம் கொண்டுவந்துள்ள பொற்கலம், மணித்திரள் முதலான திறை பொருள் அனைத்தையும் அளித்தனர். அப்போது, இவ்வேந்தன் திறை கொடாதார் இன்னும் உளரோ என்று வினவினான். அச்சமயத்தில் வடகலிங்கத்தரசன் இருமுறை திறை கொணர்கிலன் என்று அமைச்சன் கூற, அதனைக் கேட்ட குலோத்துங்கன் பெரிதும் வெகுண்டு, அவனது வலிய குன்றரணம் இடிய வென்று அவனையும் அவனுடைய களிற்றினங்களையும் பற்றிக் கொணர்தல் வேண்டும் என்று கூறினான். இவன் அங்ஙனம் கூறலும், அண்மையிலிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத் தொண்டைமான் என்பவன், தான் ஏழு கலிங்கத்தையும் வென்று வருவதாகத் தெரிவித்தான். உடனே குலோத்துங்கனும் அதற்கு உடன்பட்டு, கலிங்க நாட்டின்மீது படையெடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டான். அவ்வாறு விடைபெற்ற கருணாகரன் நாற்பெரும் படையுடன் போர்க்கெழுந்தனன். படைகள் காஞ்சிமா நகரிலிருந்து புறப்பட்டன. அவை பாலாறு', குசைத்தலை', பொன்முகரி", கொல்லி என்னும் நாலாறுந் தாண்டிப் பெண்ணை யாற்றையுங் கடந்து, சென்றன; பிறகு மண்ணாறுகுன்றி என்னும் ஆறுகளையுங் கடந்து, பேராறாகிய கிருஷ்ணையும் பிற்படுமாறு போயின;

1. சென்னை பொருட்காட்சிச் சாலையிலுள்ள உத்தம சோழன் செப்பேடுகளில் காணப்படும் 'கச்சிப்பேட்டுக் கோயிலினுள்ளால் தெற்கில் சித்திரமண்டபத்தெழுந் தருளியிருக்க' என்னும் பகுதியினால் காஞ்சிமாநகரிலிருந்த அம்மண்டபத்தின் தொன்மையும் சிறப்பும் நன்கு விளங்கும். (S.I.I., Vol. III. No.128)

2. பாலாறு, இப்போது காஞ்சிமா நகருக்குத் தெற்கே ஓடுகின்றது. அக்காலத்தில் அதற்கு வடபுறத்தில் ஓடிற்று என்பது கலிங்கத்துப்பரணியால் அறியக்கிடக்கின்றது. எனவே இவ்வாறு நிலை பெயர்ந்திருக்க வேண்டுமென்று பிரஞ்சு அறிஞர் லெபானு (Le-Fanu) என்பார் கருதுவது பொருத்தமுடையதே. (S.I.I., Vol. II., p. 365)

3. இது, குசஸ்தலீ என்று வழங்குகிறது; செங்கற்பட்டு ஜில்லாவில் ஓடுகின்றது.

4. இது திருக்காளத்தியின் பக்கத்தில் ஓடுகின்றது.

5. நெல்லூர் ஜில்லாவில் ஓடும் வடபெண்ணையாறு இதுவேயாம்.