உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 அதன் பின்னர்; கோதாவரி, பம்பா நதி, கோதமை நதி' என்பவற்றையுங் கடந்து கலிங்க நாட்டையடைந்து சில நகரங்களில் எரி கொளுவிச் சூறையாடின. அந்நிகழ்ச்சிகளைக் கண்ட அந்நாட்டுக் குடிகள் ஓலமிட்டுக்கொண்டு, தம் அரசனாகிய அனந்தவர்மன்பால் ஓடி முறையிடவே, அவன் பெரிதும் வெகுண்டு ‘நம்நாடு, கானரண், மலையரண், கடலரண் இவற்றால் சூழப்பெற்றுக் கிடத்தலை அறியாமல் அவ்வேந்தன் படை வருகின்றது போலும்; நல்லது சென்று காண்போம்' என்று கூறினன். அதனைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சன், குலோத்துங்கனுடைய படை வலிமையை எடுத்துரைத்து அப்படைகளோடு போர் புரியத் தொடங்காமல் திறைப் பொருளைக் கொடுத்தனுப்பிவிடுவதே நலமாகும் என்றனன். கலிங்க மன்னனாகிய அனந்தவர்மன் அவன் கூறியவற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் போர் தொடங்குமாறு தன் நாற் பெரும் படைகட்கும் உத்தரவு அளித்தனன். உடனே கலிங்க நாட்டுப் படைகள் போர்க்குப் புறப்பட்டன. இருதிறப் படை களும் இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போல் எதிர் நின்று போர் புரிந்தன. போர் மிகக் கடுமையாகவே நடைபெற்றது. கலிங்க வீரர்கள் தம் அரசன் கூறிய வஞ்சினத்தையும் மறந்து ஆற்றலும் வீரமும் குறைந்து, அமரில் எதிர்நின்றாற்போல் எதிர் நின்று போர் புரிந்தனர். போர் மிகக் கடுமையாகவே நடைபெற்றது. கலிங்கர் வீரமும் குறைந்து, அமரில் எதிர்த்து நிற்க முடியாமல் புறங்காட்டியோடத் தொடங்கினர். அங்ஙனம் கலிங்க வீரர்கள் ஓடவே, குலோத்துங்கன் படைத் தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான் பெருவெற்றி எய்தி, பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர் ஆகிய எல்லா வற்றையுங் கைப்பற்றிக்கொண்டான். பிறகு போர்க்களத்தை விட்டோடி ஒளிந்து கொண்ட கலிங்க மன்னனைத் தேடி, அவன் கரந்திருந்த வெற்பினையடைந்து வேலாலும் வில்லாலும் வேலி கோலி விடியும்வரையிலும் காத்திருந்து பின்னர் அவனையுங் கைப்பற்றிக்கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பினான். குலோத்துங்கன், தன் படைத் தலைவனது ஆற்றலையும்

1. இது கௌதமி என்று இக்காலத்தில் வழங்குகின்றது.