உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

1

கி.பி. 1113இல் இழந்துவிட்டான் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்துகின்றது. அன்றியும் சளுக்கிய விக்கிரமாதித் தனுடைய தண்டநாயகனாகிய அநந்த பாலையா என்பவன். கி. பி. 1118ஆம் ஆண்டில் வேங்கி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் என்பது குண்டூர் ஜில்லாவிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. வேங்கி நாட்டில் திராட்சாராமம் என்னும் ஊரில் கி. பி. 1120, 1121ஆம் ஆண்டு களில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் சாளுக்கிய விக்கிரம ஆண்டு குறிக்கப்பட்டிருப்பதும்' அந்நாடு சாளுக்கிய விக்கிரமாதித்தன் இராச்சியத்திற்குள் ளடங்கியதாய் அவன் பிரதிநிதியொருவனால் அரசாளப்பட்டு வந்தது என்பதை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே குலோத்துங்கன் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்னர், வேங்கி நாடும் இவன் ஆட்சி யினின்று நீங்கிவிட்டது எனலாம்.

இவன் ஆளுகையின் தொடக்கத்தில் ஈழநாடும் இறுதிக் காலத்தில் கங்கபாடி நாடும் வேங்கி நாடும் சோழ இராச்சியத்தி லிருந்து விலகிவிட்டனவாயினும், ஈழ நாடொன்றைத் தவிர மற்றவை எல்லாம் இவன் ஆளுகையின் கீழ் நாற்பத்தைந்து ஆண்டுகள் அமைதியுடன் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்க தாகும். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரை பரவியிருந்தது. அக்காலத்தில் சோழ இராச்சியத்திற்கு வடவெல்லை யாகவும், மேலைச் சளுக்கிய இராச்சியத்திற்குத் தென்னெல்லை யாகவும் அமைந்திருந்தது. இடையிலுள்ளது துங்கபத்திரை என்னும் ஆறேயாம். சிற்சில காலங்களில் இவ்விரு இராச்சியங்களும் அவ்வெல்லையைத் தாண்டி அவ்வாற்றின் வடக்குந் தெற்கும் சிறிது பரவியிருந்தமை யுமுண்டு. அச்செய்தியை அந்நிலப் பரப்பில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறிந்து கொள்ளலாம்.

1. S.I.I., Vol. IX part I, No. 196.

2. மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் என்பவன் தான் முடி சூடிய ஆண்டாகிய கி. பி. 1076-ல் சாளுக்கிய விக்கிரமாப்தம் என்னும் புதிய ஆண்டொன்றைத் தொடங்கித் தன் ஆட்சிக் குட்பட்ட நாடுகளில் அதனை வழங்கி வருமாறு செய்தான். அங்ஙனமே அது நூற்றாண்டுகள் வரையில் வழங்கப் பெற்றது என்று தெரிகிறது.