உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

கு லோத்துங்கனது வெளிநாட்டுத் தொடர்பு

1

39

சோழர்கட்கும் சீன தேயத்தினர்க்கும் தொடர்பு இருந்து வந்தது என்பது சீன தேய சரிதங்களால் வெளியாகின்றது. கி. பி. 1077ஆம் ஆண்டில் எழுபத்திரண்டு பேரடங்கிய ஒரு குழுவினர் சோணாட்டிலிருந்து சீன தேயத்திற்குத் தூது சென்ற செய்தி அத் தேயச் சரித்திரத்தில் காணப்படுகின்றது. அவ்வாண்டை நோக்குங் கால் அக்குழு நம் குலோத்துங்கனால் அந்நாட்டிற்கு அனுப்பப் பெற்றதாதல் வேண்டும்.* சோழ இராச்சியத்திற்கும் சீன இராச்சியத்திற்கும் ஓர் உறுதியான வாணிகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு இவ்வேந்தன் அத்தூதினை அனுப்பியிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை. அம் முயற்சியில் இவன் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் திண்ணம். இச் செய்திகளை வலியுறுத்தக் கூடிய கல்வெட்டுக்களாதல் பழைய செய்யுட்களாதல் நம் நாட்டில் இதுகாறும் கிடைக்கவில்லை யென்பது ஈண்டு அறியத்தக்கது.

கடார நாட்டுத் தொடர்பு

3

‘பரக்கு மோதக் கடாரமழித்த நாள்* என்று தொடங்கும் கலிங்கத்துப் பரணித் தாழிசை யொன்றால், குலோத்துங்கன் கடல் சூழ்ந்த கடார தேசத்திற்குச் சென்று போர் புரிந்து வெற்றியெய்திய செய்தி நன்கு புலனாகின்றது. ஆனால் இவன் கல்வெட்டுக்களில் அச்செய்தி காணப்படவில்லை. இவன் மாமன் வீரராசேந்திர சோழன் சோணாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் அவன் தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசனுக்கு இராச்சியத்தைப் பகைஞரிடமிருந்து மீட்டுக் கொடுக்கும் பொருட்டுப் பெரும் படையொன்றை அந்நாட்டிற்கு அனுப்பினான். அந் நாட்களில் கடாரத்திற்குப் படையுடன்

1. The Colas, Vol. II, p. 25.

2.

சீன தேயச் சரிதத்தில் காணப்படும் சோழ மன்னன் பெயர் குலோத்துங்கன் என்ற பெயரோடு ஒற்றுமை யுடையதாக இல்லை. மிக்க சேய்மையிலுள்ள அந் நாட்டினர் இப் பெயரைத் தவறின்றி யறிந்து எழுதவியலாது என்பது யாவரும் அறிந்ததே.

3. க.பரணி, 6 - தா. 18.

4. வீரராசேந்திர சோழனது ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டு, அவன் தன்கழ லடைந்த மன்னர்க்குக் கடாரம் எறிந்து கொடுத்தருளி'னான் என்று கூறுவது காண்க.