உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

55

கொள்ளின் குலோத்துங்கன் தன் மகள் வயிற்றுப் பேரனையே கலிங்கப் போரில் வென்று வாகை சூடினான் என்று கருதற்கு இடம் உண்டாகின்றது. குலோத்துங்கனே தன் தாயைப் பெற்ற பாட்டனுக்குரிய சோழ இராச்சியத்திற்கு உரிமை பற்றி முடி சூடிச் சக்கரவர்த்தியானவன் என்பது வரலாற்றாராய்ச்சியால் அறிந்த உண்மையன்றோ? இந்நிலையில் இவன் தன் மகள் வயிற்றுப் பேரனோடு போர் தொடங்குவதற்கு இவனது உள்ளந் தான் இடங்கொடுக்குமா? அத்தகைய போரைத்தான் சிறப்புடையதாகக் கருதி அதில் பெற்ற வெற்றியைப் பாராட்டிக் கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி என்னும் அரிய பரணிநூல் இயற்றுவரா? எனவே, அன்னோர் கொள்கை சிறிதும் ஏற்புடையதன்று. கலிங்க வேந்தனாகிய அனந்தவர்ம சோழகங்கன் என்பான் தான் அளித்த செப்பேடுகளில் தான் இராசேந்திரசோழன் மகளாகிய இராசசுந்தரியின் மகன் என்று கி.பி. 1081,1135-ஆம் ஆண்டுகளில் குறித்திருப்பதே அவர்கள் கண்ட முடிவிற்கு ஏதுவாகும். குலோத்துங்கனுக்கு இளமையில் இராசேந்திரன் என்னும் பெயர் வழங்கியதுண்மையே யெனினும் அக் கங்க மன்னன் கூறியுள்ள இராசேந்திர சோழன் இவன் அல்லன் என்பது இவ்விருவரது ஆட்சி ஆண்டுகள் வயது முதலான வற்றைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால் தெள்ளிதின் விளங்கும். கி.பி. 1112-ல் நடைபெற்ற கலிங்கப் போரில் குலோத்துங்கன்பால் தோல்வி யெய்திப் பேரிடுக்கணுக்கு உள்ளாகிய அனந்தவர்மன் கி. பி. 1135-ல் தான் இவனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்று பெருமையாகக் கூறிக்கொள்ள மாட்டான் என்பது ஒருதலை. ஆகவே, அனந்தவர்மனுடைய தாய் இராசசுந்தரி என்பாள் நம் குலோத்துங்கன் மகள் அல்லள் என்பதும் செப்பேடுகள் உணர்த்துவது போல் இராசேந்திர சோழன் என்னும் பெயருடைய வேறொரு சோழ மன்னன் மகள் ஆவள் என்பதும் ஈண்டு அறியத்தக்கனவாம். செப்பேடுகளில் குறிப்பிடப்பெற்ற அனந்தவர்மன் பாட்டனாகிய இராசேந்திர சோழன் என்பான் கங்கைகொண்ட சோழன் புதல்வனாகிய

1. The Indian Antiquary, Vol. XVIII, pp. 174 and 175.