உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

நம் காவலனைச் சூட்டிய தோன்றல் எனவும் புகழ்ந்துள்ளனர். இவனது அரசியல் தொண்டைப் பாராட்டி ‘வேள்', 'தொண்டை மான்' என்னும் பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப் பெற்றமை அறியத்தக்க தொன்றாம். இவன் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் இருந்துள்ளனன் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியக்கிடக்கின்றது.* இவனை, 'வண்டைமன்* எனவும், 'வண்டைநகரரசன்* எனவும், 'வண்டையர்க்கரசு” எனவும், 'வண்டையர்கோன்" எனவும் ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் கூறியுள்ளமையால் இவனது ஊர் வண்டை நகர் என்பது நன்கு தெளியப்படும். வண்டை என்னும் பெயருடைய ஊர் இக்காலத்தில் நம் தமிழ்நாட்டில் யாண்டுங் காணப்படவில்லை. எனவே, அது வேறொரு பெயரின் மரூஉவாக இருத்தல் வேண்டு மென்பது ஒருதலை. இந்நிலையில் காஞ்சி மாநகரிலுள்ள கல்வெட்டொன்று," அவ்வூர், சோழ மண்டலத்தில் குலோத்துங்க சோழ வளநாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டிலுள்ள வண்டாழஞ் சேரியேயாம் என்று உணர்த்துகின்றது. ஆகவே, வண்டாழஞ் சேரியைத்தான் கலிங்கத்துப் பரணி ஆசிரியர் வண்டை என்று கூறியுள்ளனர் என்பது தெள்ளிது. அஃது இந்நாளில் வண்டுவாஞ் சேரி என்னும் பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலுகாவிலுள்ள நாச்சியார் கோவிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெருவழியிலுள்ளது. வண்டாழஞ்சேரி என்பது

1. மேற்படி 13 - தா. 33.

2. விக்கிரம சோழ னுலா, வரிகள் 136-138.

3. க.பரணி, 11 - தா. 16.

4. மேற்படி 11 - தா. 30.

5.மேற்படி 11 - தா. 53.

6. மேற்படி 11 - தா. 160.

7. 'ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று - ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான கருணாகரனான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளணி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு' (S.I.I., Vol. IV, No. 862) இக் கல்வெட்டில் கருணாகரனுக்கு வேள், தொண்டைமான் என்னும் பட்டங்கள் குறிக்கப்பட்டிருப்பதும் அவன் மனைவியின் பெயர் வரையப் பட்டிருப்பதும் காண்க.