உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

காலிங்கராயன் என்னும் பட்டமளித்துப் பாராட்டினான். இவன் தில்லை யம்பலத்தில் நடம்புரியும் இறைவன்பால் பேரன்புடையவனாய் ஆண்டு இயற்றிய திருப்பணிகள் பலவாகும். அவற்றில், தில்லையில் பேரம்பலத்திற்குச் செப்புத் தகடு வேய்ந்தமை, நூற்றுக்கால் மண்டபமும் பெரிய திருச்சுற்று மாளிகையும் தேவாரம் ஓதுதற்குரிய மண்டபமும் சிவகாம கோட்டமும் கட்டுவித்தமை, திருஞானசம்பந்தரது கோயிலுக்குப் பொன் வேய்ந்தமை, திருநந்தவனம் அமைத்தமை, சுடலைய மர்ந்தார் கோயிலைக் கற்றளியாக்கியமை, தில்லைப் பேரேரிக்கு மதகு அமைத்தமை ஆகிய செயல்கள் குறிப்பிடத்தக்கனவாம். அன்றியும், திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் பொன் வேய்ந்தும் காமகோட்டம் எடுப்பித்தும் நூற்றுக்கால் மண்டபம் கட்டுவித்தும் திருநாவுக்கரசு அடிகளுக்குத் தனிக் கோயிலும் நடராசப் பெருமானுக்கு ஆடரங்கும் வேள்விச் சாலையும் அமைத்தும் தேவதான இறையிலி நிலங்கள் வழங்கியும் இவன் புரிந்துள்ள தொண்டுகள் பல எனலாம். இவற்றால் இவனது சிவபத்தியின் மாண்பு இனிது புலப்படுதல் காண்க. இவன் சைவ சமயத்திற்கு ஆற்றியுள்ள அரும் பணிகளுள் மிகச் சிறந்தது, சமய குரவர் மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியில் சேமித்து வைத்தமையேயாம். இவ்வாறு இவன் புரிந்த தொண்டுகளை யெல்லாம் விளக்கக் கூடிய முப்பத்தாறு வெண்பாக்கள்' தில்லையம்பதியிலும் இருபத்தைந்து வெண்பாக்கள்' திருவதிகை வீரட்டானத்திலும் உள்ள கோயில் களில் வரையப்பட்டுள்ளன. இவன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் உயர் நிலையில் இருந்தனன்' என்பது விக்கிரம சோழனுலாவினால் நன்கு புலனாகின்றது. அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூல் இவன்மேற் பாடப்பெற்றதாதல் வேண்டும்.

1.S.I.I., Vol. IV, No. 225. பெருந்தொகை, பாடல்கள் 1059-1094.

2. Ins. No. 369 of 1921.

பெருந்தொகை, பாடல்கள் 1095-1119.

3. விக்கிரம சோழ னுலா, வரிகள் 154-158.