உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பூசிப்பதற்கு ஒரு குருக்கள் நியமனஞ் செய்தனன் என்று கி.பி.1080-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று' கூறுகின்றது. (3) சீய கங்கன்

இவன் கங்கபாடி நாட்டின் ஒரு பகுதியையும் சித்தூர் ஜில்லாவின் ஒரு பகுதியையும் கோலார் என்று வழங்கும் குவளாலபுரத்திலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன்; கங்கர் குலத்தில் தோன்றியவன். சித்தூர் ஜில்லாவில் இக்காலத்தில் வாவிலித்தோட்டமென்று வழங்கப் பெறும் வாழைத்தோட்டம் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலுக்கு இவன் கி. பி. 1101-ல் இறையிலி நிலம் அளித்துள்ளமை அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்றால் அறியப் படுகின்றது. மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் அவனுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த சிற்றரசனும் பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றுவித்தவனுமாகிய அமராபரண சீய கங்கன் என்பான் இவனுடைய வழியில் தோன்றியவன் ஆவன்.

(4) பாண்டியன் ஸ்ரீ வல்லபன்

இவன் முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1106ல் பாண்டி நாட்டில் இருந்தனன் என்பது திருநெல்வேலி ஜில்லா ஆற்றூரிலுள்ள ஒரு கல்வெட்டினால்' அறியக் கிடக்கின்றது. குலோத்துங்கன் நிகழ்த்திய பாண்டி நாட்டுப் போரில் தோல்வி யெய்திய பாண்டியர் ஐவருள் இவனும் ஒருவனாதல் வேண்டும். பிறகு, இவன் குலோத்துங்கனுக்குக் கப்பஞ் செலுத்திக்கொண்டு, பாண்டி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்துவந்தான் என்று தெரிகிறது.

(5) கேரள கேசரி அதிராசாதிராச தேவன்

இவன் கொங்கு மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன்; சேரர் மரபினன்; வீரகேரளன், கேரள கேசரி

1. S.I.I.,Vol. VII, No. 533

2. Ins. 432 of 1929.

3. Ins. 402 of 1930.