உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

67

என்னும் பட்டங்கள் உடையவன். இவன் தஞ்சாவூர் ஜில்லாவில் திருக்கண்ணபுரத்திலுள்ள திருமால் கோயிலுக்கு கி.பி. 1104, 1106-ஆம் ஆண்டுகளில் சந்தி விளக்குகட்கு நிவந்தம் அளித்த செய்தி அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இவன் குலோத்துங்க சோழனுக்குக் கீழிருந்த ஒரு சிற்றரசன் ஆவன்.

(6) வெலநாண்டுத் தலைவனாகிய முதலாங் கொங்கன்

இவன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு ஆந்திர தேயத்தில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தெலுங்கர் தலைவனாவன்; கீழைச் சளுக்கிய வேந்தனாகிய இராசராச நரேந்திரனுடைய படைத் தலைவன் நன்னன் என்பவனுடைய புதல்வன். எனவே, இவன் தந்தை குலோத்துங்கனுடைய தந்தையின் கீழிருந்த ஒரு தலைவ னென்பது உணரத்தக்கது. இக் கொங்கனுடைய மகன் சோடன் என்பவனை நம் குலோத்துங்கன் தன் புதல்வர்களுள் ஒருவனாகக் கொண்டு பல்வகைச் சிறப்புக் களும் அளித்துப் பாராட்டினன் என்று பித்தாபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.* அன்றியும், இச் சோடன் வேங்கி மண்டலத்தையும் ஆண்டு வருமாறு குலோத்துங்கன் அதனை அளித்திருந்தமை அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது.

ங்ஙனம் வெலநாண்டுத் தலைவர்கள் தம் சக்கரவர்த்தியாகிய குலோத்துங்க சோழன்பால் பெருநலங்கள் எய்தியும், இவனது ஆட்சியின் இறுதியிலும் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் மேலைச் சளுக்கியரோடு சேர்ந்து கொண்டு அவர்கட்குக் கீழ் வாழ்ந்துகொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

(7) பொத்தப்பிக் காமதேவ சோட மகாராஜன்

இவன் பொத்தப்பி நாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; பொத்தப்பி என்பது கடப்பை ஜில்லாவிலுள்ள ஓர் ஊர். அதனைச் சூழ்ந்த நாடே பொத்தப்பி நாடாகும். அந்நாட்டை யாண்டவர் பொத்தப்பிச் சோடர் எனப்படுவர். அவர்களுள் ஒருவனே

1. Ins. Nos. 519 and 512 of 1922.

2. Ep. Ind., Vol. IV, No. 4.