உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

69

அக் கல்வெட்டு, இவனைப் பிள்ளையார் என்று கூறுவதும் இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும்.

குலோத்துங்கன் காலத்துப் புலவர்கள்

இவ் வேந்தன் காலத்தில் நிலவிய புலவர்கள் ஆசிரியர் சயங்கொண்டார், கவி குமுத சந்திர பண்டிதராகிய திருநாராயணப் பட்டர், நெற்குன்றங் கிழார் களப்பாள ராயர், வீரைப் பரசமய கோளரி மாமுனிவர் என்போர். இவர்களுள் ஆசிரியர் சயங் கொண்டார் கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர்; குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவர்; தஞ்சாவூர் ஜில்லா விலுள்ள தீபங்குடியிற் பிறந்தவர். இவ்வேந்தனது கலிங்க வெற்றியைப் பாராட்டி இவன் மீது கலிங்கத்துப் பரணி என்னும் அரிய நூலொன்று இயற்றி அரசவையில் அரங்கேற்றியவர்; பரணியிலுள்ள ஒவ்வொரு தாழிசைக்கும் ஒவ்வொரு பொற் றேங்காய் இவருக்குப் பரிசிலாக அரசனால் வழங்கப்பெற்றது என்பது செவி வழிச் செய்தியால் அறியப்படுகின்றது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இரண்டாங் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத் தமிழில் இப்புலவர் பெருமானையும் இவரது பரணியையும் உள்ளமுருகிப் பேரன்புடன் பாராட்டியிருத்தல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

கவி குமுத சந்திர பண்டிதராகிய திருநாராயணப் பட்டர் என்பார் கி.பி. 1097-ல் குலோத்துங்க சோழசரிதை என்ற நூலொன்று இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனி என்னும் ஊரில் இறையிலி நிலம் பரிசிலாகப் பெற்றவர். கவி குமுத சந்திர பண்டிதர் என்பது பட்டர் என்னும் பட்டத்தால் அறியக் கிடக்கின்றது. இவரது நூல் இக்காலத்தில் கிடைத்திலது. அது கிடைப்பின் குலோத்துங்கனது நீண்ட வாழ்க்கையில் நிகழ்ந்த எத்துணையோ உண்மை வரலாறுகள் தெள்ளிதிற் புலப்படு மென்பது திண்ணம்.

நெற்குன்றங் கிழார் களப்பாள ராயர் என்பார் தொண்டை மண்டலத்தில் புலியூர் கோட்டத்துப் பேரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்னும் ஊரில் வாழ்ந்த ஓர்

1. Ins. 198 of 1919.