உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6 பாடல்களில் யாண்டும் கூறவில்லை. வட வேந்தரான மௌரியர் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்த செய்தியையும் முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு ஆங்காங்கு நிகழ்த்திய போர்களையும் தம் பாடல்களில் குறித்துள்ள கடைச்சங்கப் புலவர்கள், பல்லவர் தமிழ்வேந்தரோடு புரிந்த போர்களுள் ஒன்றையாவது குறிப்பிடாமை ஊன்றி நோக்கற்பாலதொன்றாம். அன்றியும், பல்லவர் என்ற பெயரே சங்கத்துச் சான்றோர் பாடல் களில் காணப்படவில்லை. இவற்றையெல்லாம் நுணுகியாராயுங் கால், கி.பி. மூன்றாம் நூற்றாண்டினிடையில் பல்லவர் தமிழகத்திற்கு வந்து காஞ்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாதல் காண்க.

அன்றியும், கடைச்சங்கத் திறுதிக்காலத்தில் இயற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தில் இலங்கை வேந்தனாகிய கயவாகு என்பான் ஆசிரியர் இளங்கோவடிகளால் கூறப்பெற்றுள்ளனன். இவ்வடிகளின் தமையனாகிய சேரன் செங்குட்டுவன் என்பவன், கடைச்சங்கப் புலவராகிய பரணரால் பதிற்றுப்பத்தினுள் ஒன்றாகிய ஐந்தாம் பத்தில் பாடப்பெற்றவன். இவன் தன் தலைநகராகிய வஞ்சியில் கட்டுவித்த கண்ணகி தேவியின் கோயிலுக்கு கடவுண்மங்கலம் நிகழ்த்திய நாட்களில் இலங்கையரசனாகிய அக் கயவாகும் அங்கு வந்திருந்தான். அவன் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு சேரன் செங்குட்டு வனைப்போல் பத்தினிதேவியாகிய கண்ணகிக்கு அங்குக் கோயிலொன்று அமைத்து வழிபாடு புரிந்தான். 'இச் செய்திகள்

1. அகம். 69, 251, 281;புறம். 175.

2. சிலப்பதிகாரம், வரந்தருகாதை, அடிகள் 160 - 164.

3. இலங்கையிலிருந்து கிடைத்த கண்ணகியின் செப்புப் படிமம் ஒன்று, லண்டன்மாநகரில் பிரிட்டிஷ் பொருட் காட்சிசாலையில் இருந்தது. அது கி. பி. 1830 - ஆம் ஆண்டில் அங்குக் கொண்டுபோகப்பட்டதாம். முதற் கயவாகு தன் நாட்டில் எடுப்பித்த பத்தினிக் கோட்டத்தில் எழுந்தருளுவித்த கண்ணகிதேவியின் படிமமாகவே அஃதிருத்தல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அஃது இப்போது இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது என்று தெரிகிறது.

(Selected Example of Indian Art, Plate 33)