உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

11

சங்கத்தின் இறுதிக்காலமும் அவ்வைந்தாம் நூற்றாண்டாகவே இருத்தல் வேண்டும் என்பது அன்னோர், கொள்ளையாகும்.

அவர்கள் தம்முடிபிற்கு ஏதுவாக எடுத்துக்காட்டிய அகநானூற்றுப் பாடற்பகுதிகள் இரண்டனுள், 'பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்-சீர்மிகு பாடலிக்குழீஇக், கங்கைநீர் முதல் கரந்த நிதியங் கொல்லோ' என்ற பகுதியின் பொருள், 'பல்வகைப் புகழ் நிறைந்த போர் வெல்லும் நந்தர் என்பார், சிறப்புமிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து கங்கையாற்றின் நீரின் கீழ்மறைத்துவைத்த நிதியமோ' என்பதாம். ஆகவே, அது பாடலிபுரத்தில் ஆட்சிபுரிந்த நந்தர் என்பார் கங்கைப் பேராற்றின் கீழே பெருநிதியம் ஒளித்துவைத்திருந்த செய்தியை உணர்த்துகின்றதேயன்றி அவர்கள் கருதுவதுபோல் நந்தரது பாடலிபுரம் கங்கை வெள்ளத்தால் அழிந்ததை உணர்த்த வில்லை என்பது நன்கு தெளிப்படும். எனவே, மாமூலனார் பாடலிபுரம் ஆற்றுப் பெருக்கால் அழிந்த நிகழ்ச்சியைக் கூறவில்லை என்பது தேற்றம். அம் மாநகரில் வீற்றிருந்தரசாண்ட நந்தர், மோரியர்க்கு முற்பட்டவராவர். அவர்கள் ஆட்சிக்காலம் கி. மு. 413-க்கும் கி. பி. 322க்கும் இடைப் பட்டதென்பது ஆராய்ச்சியாளார்களது கருத்து.'ஆகவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கோடற்குக் காட்டப்பெற்ற ஆதாரங்களுள் ஒன்று வலியற்றொழிந்தமை காண்க.

இனி, முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவு' என்று மாமூலனார் மற்றொரு அகநானூற்றுப் பாடலில் கூறியிருப்பது, வடுகரைத் துணையாகக் கொண்டு மோரியர் தென்னாட்டின்மேல் படையெடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றதேயன்றி அவ்வாராய்ச்சியாளர் கருதுவதுபோல் சமுத்திரகுப்தன்” படையெழுச்சியை உணர்த்த வில்லை என்பது தேற்றம். மோரியர் படையெழுச்சியைக் குப்தர் படையெழுச்சி என்று அன்னோர் தவறாகக் கருதி விட்டமையால் கடைச்சங்க

1. The Early History of India by vincent A. Smith, (4th Edition) p. 51.

2. சமுத்திரகுப்தன் என்பான் குப்தர் மரபினனேயன்றி மோரியர் மரபினன் அல்லன் என்பது அறியத்தக்கது.