உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

மென்றோள்" என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் இறுதியிலுள்ள ‘ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே' என்ற சொற்றொடரை, 'ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும்” என்னும் குறள் வெண்பாவைக் கருத்திற் கொண்டு அமைத்திருத்தல் அறிந்து கோடற்குரியது. இதுகாறும் விளக்கியவாற்றால் கடைச் சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பது தெள்ளிதிற் புலப்படுதல் காண்க. ஆகவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் என்னும் ஒப்புயர்வற்ற நூல் அதன் ஆசிரியரால் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, அந்நூல் அரங்கேற்றப்பட்ட நாளில் கடைச்சங்கம் அழிவுற்றது என்றுரைப்பது எவ்வாற்றானும் பொருந்தாது. திருக்குறளுக்கு மதிப்புரையாகவுள்ள திருவள்ளுவ மாலையில் காணப்படும் வெண்பாக்கள் எல்லாம் அந்நூல் அரங்கேற்றப்பட்டபோது சங்கப் புலவர்களால் இயற்றப் பெற்றவையல்ல. அவற்றைப் பாடிய புலவர்களுள் பலருடைய பெயர்கள் சங்கத் தொகை நூல்களில் காணப்படாமை அறியத்தக்கது. அப்பாடல்களுள் பல, சங்கப் புலவர்களின் வாக்கு என்பதற்கேற்றவாறு அத்துணைச் சிறப்பும், பொருளமைதியும் உடையனவாகக் காணப்படவில்லை. எனவே, அப்பாடல்களின் துணை கொண்டு திருக்குறள் கடைச் சங்கத்தில் அதன் இறுதிக் காலத்தில் அரங்கேற்றப்பட்டதென்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. ஆகவே, அந்நூலின் அரங்கேற்றத்தால் கடைச் சங்கம் அழிந்தொழிந்தது என்பதும் ஆராய்ச்சியறிவுடையோர் எவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதன்று.

ஆனால், மதுரையில் பாண்டி வேந்தர்களின் பேராதர வினால் நிலைபெற்றுத் தமிழாராய்ச்சி செய்துவந்த கடைச் சங்கம் அழிவுற்றமைக்குத்தக்க காரணம் இல்லாமலில்லை. ஒரு நாட்டின்மேல் படையெடுத்துவந்து அதனைத் தம்மடிப் படுத்தும் அயல்நாட்டார், வென்ற நாட்டின் மொழி, கலை, நாகரிகம் என்பவற்றை இயன்றவரையில் அழித்தும் சிதைத்தும் விடுவதையே தம் முதற்கடமையாக மேற்கொள்வது வழக்கம் 1. புறம். 278.

2. திருக்குறள், புதல்வரைப் பெறுதல், 9.