உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6 கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் வடமொழிப் பயிற்சி எங்கும் பரவும்படி செய்துவந்தமையோடு' அம்மொழியில் வல்லுநரைப் போற்றிப் புரந்தும் வந்தனர் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துதல் காண்க. எனவே, அவ்வேந்தர்கள் பொது மக்களின் தாய்மொழி யாகிய தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிறிதும் ஈடுபடவில்லை என்றும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துச் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றும்படி செய்யவில்லை என்றும் ஐயமின்றிக் கூறலாம். தமிழகத்திற்குப் புதியவர்களாகவும் வேறு மொழி பேசுவராகவும் இருந்த பல்லவர்கள் தமிழ்மொழியின் சிறப்பினை எங்ஙனம் உணரக்கூடும்? ஆதலால், தமிழகத்தின் வட பகுதியில் முற்கால இடைக்காலப் பல்லவர்களின் ஆட்சியில் தமிழ் மொழியில் சிறந்த நூல்கள் தோன்றுவதற்கு இட மில்லாமற் போயினமை காண்க.

இனி, அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி எத்தகைய நிலையில் இருந்தது என்பது ஆராய்தற்குரியது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படை யெழுச்சியினால் பாண்டிநாடு அன்னோர் ஆட்சிக்குட் பட்டதோடு அந்நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியில் நெடுங்காலமாகப் புகழுடன் நடைபெற்றுவந்த தமிழ்ச்சங்கம் அழிந்து போயினமையும் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, அக்காலப் பகுதி பாண்டி நாட்டிலும் தமிழ்மொழி ஆதரிப்பாரற்றுத் தன் பெருமையிழந்து வீழ்ச்சியடைந்தமை தெள்ளிது. பௌத்த சமயத்தினரான களப்பிரர்கள், பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றி ஆட்சிபுரிவாராயினர். அந்நாட்களில் அவர்கள் தாம் மேற்கொண்டிருந்த பௌத்த சமயத்தைத் தமிழகத்தின் தென்பகுதியில் யாண்டும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். ஆகவே, அக்களப்பிரரது ஆட்சியில் பௌத்த சமய நூல்கள் நம் தமிழ் நாட்டில் தோன்றுவவாயின. அந்நூல்களும் தமிழ் மொழியில் எழுதப்படாமல் பாலி மொழியில் எழுதப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். கி. பி. நான்காம் நூற்றாண்டில் சோழர்களின் பழைய தலைநகராகிய உறையூரில் பிறந்து வளர்ந்த

1. Ibid, p. 157.