உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

தமிழ் நாட்டவரே என்பது அறியத் தக்கது.' இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால முதல் ஏதிலார் ஆகிய களப்பிரரும் பல்லவரும் நம் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும் பௌத்தம் சமணம் ஆகிய புறச்சமயங்களும் எத்துணை உயர்வெய்திப் பெருமையுற்றன என்பது நன்கு விளங்கும். ஆகவே, அவ்வயலாரது ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ் மொழிக்கு ஆதரவும் வளர்ச்சியும் இல்லாமற் போயின எனலாம். எனவே, அக்காலப் பகுதி தமிழ் மொழிக்கு ஓர் இருண்ட காலமாகவே இருத்தல் காண்க.

இருண்ட காலத்தினும் சில தமிழ் நூல்கள் தோன்றியமை

வடவேங்கட முதல் தென்குமரி வரையிலுள்ள பெரு நிலப்பரப்பு முழுவதும் பிற மொழியாளராகிய பல்லவரும் களப்பிரரும் அரசாண்ட காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவதற்குச் சிறிது வாய்ப்பு ஏற்பட்டமை மகிழ்ச்சிக்குரிய தொன்றாம். அக்காலப் பகுதியில் தமிழ் மொழிக்கு அரசாங்க ஆதரவு ஒரு சிறிதுமின்மை முன்னர் விளக்கப்பட்டது. எனினும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சிவனடியார் சிலர், அக்காலப் பகுதியில் இருந்துள்ளனர். அத்தகைய பெரியோர்களுள் காரைக்கால் அம்மையார், திருமூலநாயனார் என்போர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் இயற்றியுள்ள அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருமந்திரம் ஆகிய நூல்கள் அந்நாட்களில் தோன்றியவை என்பது ஐயமின்றித் துணியப்படும். அக்காலப் பகுதியில் சில நீதி நூல்களும் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் முதலில் நீதி நூல்கள் தனியாக எழுதப்பெற்ற காலம் கடைச்சங்க காலமாகும். கடைச்சங்க நாளில் தமிழில் தனி நீதி நூல்கள் தோன்றியமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாம்.

1. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration Vol. p. 245.