உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

கடைச்சங்க காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் பௌத்தரும் சமணரும் அரசாங்க ஆதரவு பெற்றுப் பெருஞ் செல்வாக்கு எய்தியிருந்தமை முன்னர் விளக்கப் பட்டது. அந்நாட்களில் தமிழ் மக்களுட் சிலர் பௌத்த சமண சமயங்களில் பெரிதும் ஈடுபட்டு அவற்றைச் சார்ந் தொழுகத் தலைப்பட்டமையோடு தம் ஒழுக்க வழக்கங்களையும் கைவிடத் தொடங்கினர். அந்நிகழ்சிகளை நன்குணர்ந்த சைவ வைணவப் புலவருட் சிலர், தமிழர்களுடைய வழக்க வொழுக்கங்களும் நாகரிகமும் இழுக்குறாவண்ணம் சிறு நீதிநூல்கள் இயற்றி மக்களிடையே பரப்புவாராயினர். சங்ககாலத் தமிழ் மக்கள், கலப்பற்ற தூய தமிழில் பேசியும் எழுதியும் வந்தமையோடு சிறந்த தமிழறிவு வாய்க்கப்பெற்று மிருந்தனர். எனவே, அவர்கள் உயர்ந்த நீதி நூலாகிய திருக்குறளைப் படித்து உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால், கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட இருண்டகாலத் தமிழ் மக்கள் சிறந்த தமிழறிவு பெறுவதற்கு வாய்ப்பில்லாமற் போயினமையின் அத்தகைய ஆற்றல் இல்லாத வராயிருந்தனர். அதுபற்றியே அக்காலத்தில் நிலவிய அறிஞர்கள் அன்னோர்க்கு ஏற்றவாறு எளிய வெண்பாக்களில் சிறுசிறு நீதி நூல்கள் இயற்றி யுள்ளனர் என்பது அறியற்பாலதாம். அவ்வாறு தோன்றிய நூல்கள் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், நான்மணிக் கடிகை என்பனவாம். அந்நூல்களை அவ்விருண்ட காலத் தமிழ் மக்கள் படித்துத் தம் வழக்க வொழுக்கங்கள் குன்றாதவாறு நடந்துவந்தனர் என்பதற்குச் சான்றுகள் இல்லாம லில்லை. அந்நிலையை யுணர்ந்த சமணர்கள் தாமும் அம் முறையைக் கைக்கொண்டு மறைமுகமாகத் தம் சமயக் கொள்கைகளைத் தமிழ் மக்களிடையே பரப்பக் கருதினர். அதற்கேற்ப, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பௌத்த சமயம் வீழ்ச்சியடைந்தது. பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் ஆட்சிபுரிந்த களப்பிரரும் பௌத்த சமயத்தைத் துறந்து, சமண சமயத்தை மேற்கொண்டு ஒழுகத் தொடங்கினர். ஆகவே, சமணர்கள் தம் கருத்தினை நிறைவேற்றிக் கோடற்கு அதுவே தக்க காலமாக அமைந்தது. எனவே, தமிழ்நாட்டில், அமண்பள்ளிகளில் தங்கியிருந்த சமண