உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

எத்துணையோ இடையூறுகட்கும் ஆட்சி மாறுதல்கட்கும் நடுவில் அவை நமக்குக் கிடைக்காமற் போயினமை இயல்பாக நிகழக்கூடியதேயன்றி வியப்பிற்குரிய தன்று. ஆயினும், பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரைகண்ட பேராசிரியன்மார், தம் தம் உரைகளில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ள நூல்களுள் சிலவும் புறத்திரட்டிற் காணப்படும் நூல்களுள் சிலவும் இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உளது. அவை, எலி விருத்தம், நரிவிருத்தம், கிளிவிருத்தம், முத்தொள்ளாயிரம் என்பனவாம். அவற்றுள், நரிவிருத்தத்தைச் சைவ சமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளும் எலி விருத்தம், கிளி விருத்தம் ஆகிய இரண்டையும் அவ்வடிகள் காலத்தவராகிய திருஞான சம்பந்தரும் முறையே ஆதிபுராணத் திருக்குறுந் தொகையிலும் திருவாலவாய்ப் பதிகத்திலும் குறித்துள்ள மையின், அந்நூல்கள் மூன்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாதல் வேண்டும். எனவே, அவை கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மதுரை மாநகரிலிருந்த சைனரது தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக நிலவிய அமண் சமயப்புலவர்களால் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். அந்நூல்கள் இந்நாளில் கிடைக்காமற் போயினமையின் அவை இறந்தனபோலும். சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரால் இயற்றப் பெற்ற நரிவிருத்தம் என்னும் நூல் திருநாவுக்கரசு அடிகளால் கூறப்பெற்ற நரிவிருத்தத்தினும் வேறானதொன்று என்பது ஈண்டுணரற்பாலதாகும்.

அக்காலப் பகுதியில் எழுதப்பட்ட நூல்களுள், புலவர் பெருமக்கள் எல்லோருடைய உள்ளத்தையும் பிணிக்கும் தன்மை வாய்ந்தது முத்தொள்ளாயிரம் என்ற அரிய நூலேயாம். அது, தமிழ் மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களின் பெருமைகளை எடுத்துக்கூறும் ஒரு பெருநூலாகும். அந்நூல் முழுவதும் இக்காலத்திற் கிடைத்திலது. எனினும், பண்டை உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற சில பாடல்களே இந்நாளில் தேடித் தாகுக்கப்பெற்று முத் தொள்ளாயிரம் என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருப்பது