உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

31

அறியத்தக்கது. இந்நூலைப் பற்றிய பிற செய்திகள் பின்னர்க் கூறப்படும்.

இனி, இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக இதுகாறும் ஆராய்ந்து காணப்பட்ட இலக்கியங்களின் வரலாறு களைத் துருவி நோக்கி உண்மைச் செய்திகளை யுணர்ந்து கொள்வது ன்றியமையாததாகும். இலக்கிய வரலாற்றில் விளக்கப்பட வேண்டியவை, நூல் வரலாறு, நூலாசிரியர் வரலாறு, நூல் இயற்றப்பெற்ற காலம், நூலால் நுவலப்படும் பொருள் என்பனவாம். இவற்றை உணர்த்தும் பொருட்டு நூல் தோன்றிய காலத்திலேயே இயற்றப்பெற்றுள்ள சிறப்புப் பாயிரப் பாடல்கள் இவற்றுள் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கூறுகின்றன. எனவே, அவை இலக்கிய வரலாற்றிற் குரியனவாக ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற எல்லாவற்றையும் உணர்த்துவன வாயில்லை. ஆயினும், ஓரளவு பயன்படும் நிலையிலுள்ள சிறப்புப்பாயிரப் பாடல்களையும் நூலகத்துக் காணப்படும் சில அகச்சான்றுகளையும் பிற சான்றுகளையும் துணையாகக் கொண்டு இலக்கிய வரலாற்றை ஆராய்ந்து துணிதல் ஏற்புடையதேயாம்.

கி. பி. 250 முதல் கி. பி. 600 வரையில் அடங்கிய காலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக ஆராய்ந்தறியப்பெற்ற தமிழ் நூல்கள் முன்னர்க் கூறப்பட்டன. அவற்றுட் சில, சமய நூல் களாகவும், ஒன்று, சேர சோழ பாண்டியரின் பண்டைப் பெருமை களைக் கூறும் நூலாகவும் ஏனைய வெல்லாம் நீதி நூல் களாகவும் இருத்தல் உணரற்பாலதாம். அந்நூல்களெல்லாம் எவ்வெவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அன்றியும், அவை எந்த எந்த நூற்றாண்டில் தோன்றியிருத்தல் கூடும் என்பது கூட உய்த்துணர்ந்து கூறவேண்டிய நிலையில்தான் உளது. ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கும் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் கடைப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் முதலில் நீதி நூல்களை ஆராய்வோம்.