உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

33

ஊரில் பிறந்தவர் என்பதும் நாகன் என்ற இயற்பெயர் உடையவர் என்பதும் நன்கு அறியப்படும். இவர் வைணவ சமயத்தினர் என்பது நூலின் தொடக்கத்தில் காணப்படும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள்' இரண்டினாலும் தெள்ளிதிற் புலனாகின்றது. இவருடைய விளம்பி என்ற ஊர் யாண்டுள்ளது என்பது தெரிய வில்லை. இவருடைய பெற்றோர் யாவர் என்பதும் இவரது வாழ்க்கை வரலாறும் புலப்படவில்லை. இவர் கி. பி. நான்காம் நூற்றாண்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப் படுகின்றது. இது போன்ற நீதி நூல்கள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டமைக்குக் காரணம் முன்னர் விளக்கப் பட்டுள்ளது. இவ்வாசிரியர் எடுத்துரைக்கும் பல சிறந்த உண்மை களும் அறிவுரைகளும், இவருடைய புலமைத் திறத்தையும் பரந்த உலகியலறிவையும் உள்ளத்தின் தெளிவுடைமையும் நன்கு புலப்படுத்துகின்றன. ஆசிரியர் திருவள்ளுவனாரைப் போல், இவர் தம் நூலை ஒருமுறைப்படுத்தி அமைக்கவில்லை. எனினும், இவர் தம் புலமையினாலும் அனுபவத் தினாலும் அறிந்த அரிய உண்மைகளையும் உலகியல்புகளையும் நீதி களையும் மக்கள் எளிதில் உணர்ந்து பயனெய்துமாறு அவ்வப் படியே இனிய வெண்பாக்களில் கூறியுள்ளனர். ஆதலால், ஒரே கருத்து வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு சொற்றொடரால் குறிக்கப்பட்டிருத்தலை இவருடைய நான்மணிக்கடிகையில் சில இடங்களிற் காணலாம். மக்களாகப் பிறந்தோர் எல்லாம் இம்மையிற் பொன்றாப்புகழை நிலை நிறுத்தி, மறுமையில் உயர்ந்த வீட்டுலகம் புகுதலையே தம் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும் என்பதையும், அதற்குறுதுணையா யிருப்பது கல்வியேயாம் என்பதையும், 'கற்பக் கழிமடமஃகும்* என்று தொடங்கும் பாடலில் இவர் உணர்த்தியிருப்பது அறியத் தக்கது.

1. மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும்

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல ரொக்கு நிறம்.

(நான்மணி. கடவுள் வாழ்த்து, 1)

2.

நா. கடிகை, பா. 28.