உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-7

தமிழனும், தமிழ்க் கல்வியும் எழுச்சி பெற்ற காலம். அக்காலக் கட்டத்தில் தோன்றிய இப் பெருமகனார் வெறும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக மட்டும் நில்லாது தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாற்றை மீட்டெடுக்கும் பெரும் பணியில் தம்மைத் தலைப் படுத்தி வெற்றி வாகை சூடியவர். பாவேந்தர் சொன்னது போல அவர் ஒரு,

செந்தமிழ்ப் பேராசிரியர்,

வரலாற்று ஆய்வாளர்,

புலவர்

முந்து பேரிலக்கியத்து முழங்குகடல் ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு

புலவர் குழு மணி விளக்கு... எனப் பல்வேறு சிறப்புக் குரியவர்.

இவர் இலக்கிய இலக்கண உரை கூறுவதோடு நின்றுவிட வில்லை. ஓர் இன மக்களின் வாழ்க்கை நிலைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அம் மக்களின் வரலாறே உயிர்ச்சாரம்; ஆதலால் அம்மக்கள் தங்கள் வரலாற்றை அறிந்த தெளிதல் இன்றியமையாதது; அத் தெளிவே அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். "தமிழ்நாட்டின் பழைய வரலாற்றை எழுதுவதற்குத் தக்க சான்றுகள் (சாதனங்கள்) இல்லை எனவும் அதனால்தான் வரலாற்று (சரித்திர) நூல்கள் மிகுதியாக எழுதப்பெற வில்லை எனவும் சிலர் குறைகூறுகின்றனர். அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் உண்மையான தாய்நாட்டுப் பற்றும் ஊக்கமும் உழைப்பும் இல்லாமையேயாம். ஒரு நாட்டினர் தம் பழைய வரலாறுகளை இவ்வாறு புறக்கணித்து விட்டால் அன்னோர் தம் பண்டைய பெருமையை இழந்தவராகக் கருதப்படுவர்”1 எனக் கூறியதோடமையாது தாமே வரலாற்றுச் சான்றுகளைத் தேடித் தொகுத்துப் பிற்காலச்சோழர் வரலாற்றையும், பாண்டியர் வரலாற்றையும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தார்.

அக்காலக் கட்டத்தில் தமிழக வரலாற்றை எழுதப் புகுந்த சிலர் வரலாற்றை ஆங்கிலத்திலேயே எழுதினர். அவை ஆங்கில மொழி கற்றுவல்ல ஒரு சில்லோர்க்கே பயன்படுவதன்றி தமிழ் மக்கட்குப் பயன்படாது என்பதை தமது வாணாளில் கண்கூடாகக் கண்டவர். "வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு நம் மொழியில் எத்தனை வரலாற்று நூல்கள் எழுதப் பெற்றுள்ளன என்று பார்ப்போமானால்