உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xiv

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-7

ஆய்விதழ்களில் வெளிவந்தன. அன்றைய தமிழ் மக்களும் அவற்றைப் படித்துப் பயன்படுத்தினர். அவற்றைப் பயன்படுத்திக் கல்விக் கழகப் பாடநூல்களில் ஏற்றி தமிழுலகம் அறியச் செய்தனர். அவ்வழக்கம் இன்று முற்றிலும் கைவிடப்பட்டதால் பண்டாரத்தார் காலத்திற்குப் பின் வெளிவந்த ஆயிரக்கணக்கானக் கல்வெட்டுகளையும் அவற்றின் வழி நமது நாடு மொழி இனம் பற்றிய கிடைத்தற்கரிய செய்தி களையும் கற்று மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்வார் எவரும் இன்மையால் நம்மை நாம் அறியாமல் அறியாப்புதைகுழியில் ஆழப் புதைந்து கொண்டுள்ளோம். பண்டாரத்தார் அக்காலத்தில் வெளிவந்த, வந்து கொண்டிருந்த கல்வெட்டுகளைக் கற்றுணர்ந்து இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்ந்து தமிழுலகுக்கு அளித்த அளவுக்கு அக்கால, இக்காலக் கல்வெட்டாய்வாளர்கள் ஆய்ந்தளித் திருப்பார்களா என்பது ஐயமே. அவர்களும் பண்டாரத்தார் ஆய்ந்த அளவுக்கேனும் நமது இலக்கியங்களையும் கல்வெட்டுகளையும் கண்டுணர்ந்து நமது கலை பண்பாட்டு வரலாறுகளை ஆய்ந்தளித் திருப்பாரேல் நமது நாடும் மொழியும் இனமும் நன்னிலை எய்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பண்டாரத்தாரது ஆராய்ச்சியைப் போற்றும் அதே வேளையில் அகத்தியர் போன்ற தொல்கதை மாந்தரையும் ஆராய்ந்து உண்மை போல வெளிப்படுத்தியுள்ள அவரது ஆய்வுப் போக்கு நம்மால் ஏற்றுக் கொள்ளதக்கதாகத் தோன்றவில்லை. அகத்தியர், வெள்ளையர் காலத்தில் கிறித்தவ மதம் பரப்ப வந்த வீரமாமுனிவரான பெசுக்கிப் பாதிரியார் போல வைதீக மதம் பரப்ப வந்த ஒரு வைதீகர். வடநாடு தாழ்ந்தது, தென்னாடு உயர்ந்தது என்ற கட்டுக் கதைகள் வடக்கில் சமண பவுத்த செல்வாக்கால் வைதீகம் தாழ்ந்ததையும் தெற்கில் அதற்கு வாழ்வு கிடைத்து உயர்ந்ததையும் காட்டுவதாகும். அகத்தியர் பற்றிக் கூறப்பட்டன யாவும் வைதீகத்திற்கு வாழ்வளிப்பதற்காக கட்டிவிடப்பட்ட கதைகளேயன்றி வேறன்று என்பதைத் தெள்ளிதின் ஆய்வார் உணர்வர். அதே போன்று அவரது ஆய்வு முடிவுகளில் சிற்சில இன்று மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வேண்டியனவாக உள்ளன. வரலாற்றில் இத்தகைய திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே. அன்றைய அவரது ஆய்வில் ஏற்பட்டுள்ள குறைகள் அப்பெரியாரது பிழையன்று. அன்று அவருக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் சரியானவையே. இன்று கிடைக்கும் சான்றுகளின் வழி அவை திருத்தம் பெற வேண்டியனவாக உள்ளன.