உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

7

இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்றும், ஆகவே அடிகள் நந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி.பி. 825-ல் வாழ்ந்தவராதல் வேண்டுமென்றும் அன்னோர் கூறுகின்றனர்.

அடிகள் தம்காலத்துப் பல்லவ மன்னன் போர் வலிமை யற்றவன் என்றாதல் அவனுக்குக் குறுநில மன்னர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்றாதல் அப் பாடலில் கூறினாரில்லை; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத்தெம் பெருமான் அருள் புரிபவராகவும், அவ னோடு முரணிப் பகைஞராயினார்க்கு அருள் புரியாது தண்டனை விதிப்பவராகவும் இருந்துள்ளமையை நன்கு விளக்கி அம் மன்னனது ஒப்புயர்வற்ற சிவபக்தியின் மாட்சியைத் தெரிவித் துள்ளார். ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்னோர் கொண்ட பொருள் சிறிதும் பொருந்தாமையின் அப்பெரியார் நந்திவர்மப் பல்லவன் காலத்தினர் அல்லர் என்பது தெளிவாதல்

காண்க.

இனி, சுந்தரமூர்த்திகள் வாழ்ந்த காலம் யாதென ஆராயலாம். அடிகள் தாம் திருவாய்மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையில், 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கனடியார்க்குமடியேன்' என்று கூறியிருக் கின்றனர்; இவ்வடியில் வந்துள்ள 'காக்கின்ற' என்னும் நிகழ்காலப் பெயரெச்சம், காடவர்கோனாகிய கழற்சிங்கன் அடிகள் காலத்து மன்னன் என்பதை இனிது உணர்த்துகின்றது. காடவர் என்பது பல்லவர்களுக்குரிய பெயர்களுள் ஒன்றாகும். ஆகவே, இக்கழற் சிங்கன் பல்லவ அரசனாயிருத்தல் வேண்டும். அன்றியும் இவ்வேந்தன் அறுபத்து மூன்று அடியார்களுள் வைத்துச் சுந்தர மூர்த்திகளால் போற்றப் பட்டிருத்தலின் சிறந்த சிவபக்தனாகவும் இருத்தல் வேண்டும். இனி, நம் தமிழகத்தில் அரசாண்ட பல்லவ மன்னர்களுள் கழற்சிங்கன் என்ற பெயருடையவன் ஒருவனு மில்லை. ஆனால் நரசிங்கவர்மன், இராசசிங்கவர்மன் என்ற பல்லவ வேந்தர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் முதல் நரசிங்க வர்மன் திருஞானசம்பந்தர் காலத்தின னாதலின் சுந்தர மூர்த்திகள் அவ்வரசன் காலத்தினரல்லர் என்பது திண்ணம்.