உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

போற்றி அன்னோர்க்குப் பல நலங்கள் புரிந்தனனேயன்றி வேறு ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை" என்பது. இதனாலும் இவன் சிறந்த சிவபத்தன் என்பது இனிது புலப்படுதல் காண்க.

9

இவ்வேந்தன் தன் மனைவியோடு திருவாரூருக்குச் சென்று புற்றிடங் கொண்ட முக்கட் பெருமானை வணங்கித் திருக்கோயிலில் வலம் வருங்கால் இவனது மனையாள் பூக்கள் தொடுக்கப்படும் இடத்திற்குச் சென்று ஒரு மலரை எடுத்து மோந்து பார்க்க, அங்கிருந்த சிவனடியாராகிய செருத்துணையா ரென்பார் அதனைப் பொறாது அவளது மூக்கை வாள்கொண்டு அறுத்தலும், பின்னர் அங்கு வந்த அரசன் தன் மனைவி செய்த குற்றம் மிகப்பெரிது என்று அவ்வடியாரிடம் கூறியதோடு அவள் அம்மலரை எடுத்தமைக்குக் காரணமாயிருந்த கையினையும் வெட்டி வீழ்த்தினான் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இவ்வரலாற்றால் இவனது சிவபக்தி எத்தகைய சிறப்புடைய தென்பது ஒருவாறு நன்கு புலப்படும். இவன் காஞ்சியில் கைலாயநாதர் கோயில் எடுப்பித்த நாளில்தான் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிவபெருமானுக்கு மனக் கோயில் கட்டினாரென்பது ஆராய்ச்சியாளரது கொள்கை யாகும். சிவபெருமான் தாம் பூசலாரது மனக் கோயிலுக்கு முதலில் எழுந்தருள வேண்டியிருந்தமையின், அரசன் எடுப்பித்த கற்கோயிலுக்குக் கடவுண்மங்கலஞ் செய்யக் குறிப்பிட்டிருந்த நாளை மாற்றி அதனை வேறொரு நாளில் செய்யுமாறு அவன் கனவில் கூறியருளினாரென்பதும் பிறவும் பெரியபுராணத்தில் காணப்படுஞ் செய்திகளாம். ஆகவே, இவ்வேந்தன் எடுப்பும் இணையுமற்ற சீரிய சிவபத்தனாய் அந்நாளில் நிலவினானென்பது திண்ணம். இத்துணைச் சிறந்த சிவபக்தியுடைய பல்லவவேந்தன் வேறு ஒருவனும் இலனாதலின், சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையிற் கூறியுள்ள “காடவர்கோன் கழற்சிங்கன்” இவனே யாதல் வேண்டும். இனி, அடிகள் இவனை இராசசிங்கன் என்றாதல் நரசிங்கன் என்றாதல் வழங்காமல் கழற்சிங்கன் என வழங்கியுள்ளாரேயெனின், சிங்கன் என்பது அவ்விரு பெயர் கட்கும் பொதுவாயிருத்தலின் அரசர்க்குரிய பெருமையையும் வீரத்தையும் உணர்த்துங் கழல் என்னும் மொழியை அதற்கு