உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -7 முன்பெய்து கழற்சிங்கன் என்று சிறப்பித்துக் கூறிப் பாராட்டி யுள்ளாரென்று உணர்க.

இனி, அடிகள் காலத்துப் பேரரசன் நரசிங்கவர்மனே என்பது வேறொரு சிறந்த சான்று கொண்டும் உறுதியெய்து கின்றது. அடிகளை இளமையில் வளர்த்தவன் திருநாவலூரில் வாழ்ந்த நரசிங்க முனையரையன் என்ற சிற்றரசன் என்பது பெரிய புராணத்தால் அறியப்படுகின்றது. முற்காலத்தில் பேரரசர்கள் தமக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் பட்டங்கள் வழங்குங்கால் தம் பெயர்களோடு இணைக்கப்பெற்ற பட்டங் களையே கொடுப்பது பெரு வழக்காயுள்ளது. இவ்வுண்மை கல்வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இனிது புலப்படும். உதாரணமாக, இராசராச மூவேந்த வேளான், உத்தம சோழப்பல்லவ ராயன், முடிகொண்ட சோழமூவேந்த வேளான், சயங்கொண்ட சோழ விழுப்பரையன் என்னும் பட்டங்கள் நெடுமுடி வேந்தர் களுடைய பெயர்களோடு இணைக்கப் பட்டிருத்தல் காண்க. முனையரையன் என்ற பட்டத்திற்கு முன் பேரரசனது நரசிங்கன் என்னும் பெயர் இணைக்கப்பட்டு நரசிங்க முனையரையன் என்று சுந்தரமூர்த்திகளது வளர்ப்புத் தந்தையாகிய குறுநில மன்னன், வழங்கப்பட்டுள்ளான். ஆகவே, சுந்தர மூர்த்திகளை வளர்த்த நரசிங்க முனையரையன் என்பான் பல்லவ அரசனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனுக்குத் திறைசெலுத்திய ஒரு சிற்றரச னாதலின் இவ்வடிகள் இப்பல்லவ அரசன் காலத்தினரென்பது உறுதியாதல் உணர்க.

இனி, இவ்வேந்தன் பேரரசனென்பது, 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் - கழற்சிங்க னடியார்க்கு மடியேன்' என்னும் அடிகளது திருவாக்கினால் நன்கு துணியப் படும். இதற்கேற்பச் சேக்கிழாரும் இவனைக் 'கோக்கழற்சிங்கர்’ என்று கூறுகின்றார். 'கோ' என்னும் ஓரெழுத்தொருமொழி பேரரசனையே உணர்த்துமென்பது 'கோக்கண்டு மன்னர் குரைகடற்புக்கிலர்' என்ற அடியாலும் 'கோஇராசகேசரி வர்மன்,' 'கோப்பரகேசரிவர்மன்', 'கோச்சடையவர்மன்', 'கோமாறவர்மன்', என்னும் கல்வெட்டுத் தொடர் மொழி