உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

13

களும், ஓசை நயங்களும் அமைந்திருப்பதைக் காணலாம். ஆகவே, இவ்விரு காப்பியங்களுக்கும் பிற்பட்ட காலத்தவர் கம்பர் என்பது தேற்றம். இவ்விரு நூல்களும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலாதல், பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியிலாதல், இயற்றப் பட்டிருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களது முடிபாகும். 'எண்ணிய சகாத்தம் எண்ணுற்றேழு' என்னும் பாடலை ஏற்றுக் கொண்டால், கம்பர் சிந்தாமணிக்கும் சூளாமணிக்கும் முற்பட்ட காலத்தவர் ஆவர். இஃது உண்மைக்கு முரண்பட்ட முடிவு என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே, இப் பாடலின் துணை கொண்டு கம்பர் காலத்தைக் காண முயலுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று.

இனி, இராமாயணத்திற் காணப்படும் அகச்சான்றுகளின் துணைகொண்டு இவர் காலத்தை ஆராய்ந்து துணிவது பொருத்த முடையதேயாம். மருத்துமலைப்படலத்திற் காணப்படும்.

'வன்னிநாட் டியபொன் மௌனி

வானவன் மலரின்மே லோன்

கன்னிநாள் திருவைச் சேர்ந்த

கண்ணனும் ஆளுங் காணிச்

சென்னிநாள் தெரியல் வீரன்

தியாகமா விநோதன் தெய்வப்

பொன்னிநாட் டுவமை வைப்பப்

புலன்கொள நோக்கிப் போனான்.'

என்னும் பாடலில் 'தியாகவிநோதன்' என்ற சிறப்புப் பெயரால் ஓர் அரசன் குறிக்கப்பட்டுள்ளனன். இவ்வேந்தன் கி.பி 1178 முதல் 1218 வரையில் ஆட்சி புரிந்த மூன்றாங்குலோத்துங்க சோழனே யாவன் என்று ராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்களும், அவர்களைப் பின்பற்றி ராவ்சாகிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டும் சான்றுகள் இரண்டினுள், இம்மன்னன் தியாகவிநோதன் என்ற சிறப்புப் பெயருடையவனாயிருந் தமையோடு 'வீரக்கொடியொடு தியாகக் கொடி யெடுத்து’ ஆட்சிபுரிந்தவன் என்றும் இவன் மெய்க்கீர்த்தி இவனைப் புகழ்ந்து கூறுவது ஒன்று; மற்றொன்று ‘ஆவின் கொடைச்சகன்