உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

15

என்ற பாடலில் ‘அமலன்' என்னும் பரியாய நாமத்தால் ஒரு சோழ மன்னனைக் கூறியுள்ளனர் என்று தெரிகிறது. இவ்வேந்தன் யாவன் என்று ஆராயுமிடத்து, சிவஞானியாகிய கண்டராதித்த சோழர்க்கும், செம்பியன் மாதேவியார்க்கும் புதல்வனாகத் தோன்றிய உத்தமசோழனாக இருத்தல் வேண்டும் என்று துணிதற்கு இடமுளது. உத்தமன் என்ற பெயரையே அமலன் என்னும் பரியாயப் பெயரால் கம்பர் குறித்துள்ளாராதல் வேண்டும். இவன் கி.பி. 970 முதல் 985 வரையில் ஆட்சி புரிந்தவன். ‘ஆவின் கொடைச்சகன்' என்று தொடங்கும் பழம் பாடலில் சொல்லப்பட்டுள்ள சகம் ஆண்டு தொள்ளாயிரம் ஆகும் என்பது முன்னரே விளக்கப்பட்டது. இவ்வாண்டு கி.பி. 978 ஆகும். எனவே, கம்பர் இராமாயணம் பாடிய காலமாக அறியப்படும் கி.பி. 978-ஆம் ஆண்டு உத்தம சோழன் ஆட்சியின் நடுவில் அமைந்திருத்தல் அறியத் தக்கது. ஆகவே, கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பர் இருந்தனர் என்பது தெள்ளிது. தமிழ்த்தாயின் அருந்தவப் புதல்வர்களாய், கவிச்சக்கர வர்த்திகள் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கியவர்கள், கம்பர், சயங் கொண்டார், ஒட்டக்கூத்தர், கச்சியப்பமுனிவர் என்ற நால்வருமே யாவர். இவர்களுள் கம்பரே காலத்தால் எல்லோருக்கும் முற்பட்ட கவிச்சக்கரவர்த்தியாவர் என்பது தேற்றம்.