உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

17

என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் நன்கறியலாம். எனவே, திருத்தொண்டர் வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறும் வழி நூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பியினால் இயற்றப் பெற்றது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. அந்நூல், தொகையடியார் ஒன்பதின்மர், தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய எழுபத்திரண்டு சிவனடியார் வரலாற்றையும் எண்பத்தொன்பது இனிய பாடல்களிற் கூறுகின்றது. தனியடி யார்களை அறுபத்து மூவர் என்று கணக்கிட்டு முதலில் உணர்த்தியவர் நம்பியாண்டார் நம்பியேயாவர்.

இப்பெரியார் தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், புகழ்ச்சோழர், இடங்கழியார், கோச்செங்கட்சோழர் ஆகிய அடியார்களைப் பற்றிய பாடல்களில் தம் காலத்துச் சோழ மன்னன் ஒருவனைக் குறிப்பிட்டுள்ளனர். தம்மை அன்புடன் ஆதரித்துப் போற்றிவந்த அரசர், வள்ளல் முதலானோரின் பெயர்கள் என்றும் நின்று நிலவுமாறு அவர்களைத் தம் நூல்களிற் புகழ்ந்து பாடிவைப்பது நம் தமிழ் நாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் வழக்கம் என்பது தொன்னூலாராய்ச்சி யுடையார் யாவரும் அறிந்த தொன்றாம். அத்தகைய செயல் புலவர்களின் நன்றி மறவாமையாகிய அருங்குணத்தை உணர்த்தும் எனலாம்.

பாரதவெண்பாவின் ஆசிரியர் பல்லவ அரசனாகிய தெள்ளா றெறிந்த நந்திவர்மனையும், கவிச்சக்கர வர்த்தியாகிய கம்பர் வெண்ணெய் நல்லூர்ச் சடைய வள்ளலையும், சேக் கிழாரடிகள் மூன்றாங் குலோத்துங்க சோழனையும், புகழேந்திப் புலவர் முரணை நகர்ச் சந்திரன் சுவர்க்கியையும், வில்லிபுத்தூ ராழ்வார் கொங்கர் கோமானாகிய வரபதி யாட்கொண்டானையும், அருணகிரிநாதர் விசயநகரவேந்தனான இரண்டாம் தேவராயனையும், துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் அண்ணாமலை ரெட்டியாரையும் நன்றிபாராட்டு முறையிற் புகழ்ந்து பாடியிருத்தலை அப்புலவர் பெருமான் இயற்றியுள்ள நூல்களிற் காணலாம்.

சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்து வந்த ஆதித்தன் என்ற சோழமன்னன்