உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

4. தமிழ்முனிவர் அகத்தியர்

தமிழ் முனிவராகிய அகத்தியனாரின் படிமங்கள் நம் தமிழகத்தில் கருங்கற் கோயில்களாகவுள்ள சிவன்கோயில்கள் எல்லாவற்றிலும் இருத்தலை இன்றுங் காணலாம். அக் கோயில் களைக் கட்டுவித்த பண்டைத் தமிழ் வேந்தர்கள், அவற்றில் அகத்தியனாரின் படிமங்களை முற்காலத்திலேயே எழுந்தருளி வித்தமைக்குக் காரணம், இம் முனிவர் பெருமானுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்டிருந்த தொன்மைத் தொடர்பே எனலாம். அத்துணைத் தொன்மைத் தொடர்புடைய வராகிய இவர், வடக்கினின்றும் தெற்கே வந்து நம் தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்பதுதான் வடநூல்களின் முடிபு. ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய் முக்காலங்களும் உணர்ந்து நிறை மொழி மாந்தராக நிலவும் இருடிகள் யாண்டும் எளிதிற் போதற்கும் இருத்தற்கும் ஆற்றல் படைத்தவர் ஆவர். எனவே, இவர் வடபுலத்திலிருந்து தென்புலம் வந்திருக்கலாம்; தென்புலத்திலிருந்து வடபுலஞ் சென்று மறுபடியும் தென்புலத்திற்குத் திரும்பி யிருக்கலாம்; கடல் கடந்து கீழ்புலஞ் சென்றிருக்கலாம். ஆகவே, இவர்நாடு யாது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டப்படுவ தன்று. இனி தொன்னூல்கள் இவரைப் பற்றிக் கூறும் வரலாறு களை ஆராய்ந்து காண்போம்.

1. அகத்தியனாரும் தமிழ்நாடும்

சிவபெருமான் மலைமகளை மணந்த காலத்தில் எல்லோரும் இமயத்தில் கூடியிருந்தனராக, அப்பொறை யாற்றாமல் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்து விடவே, இறைவன் அகத்தியனாரைத் தெற்கின்கண் சென்று பொதியின் மலையில் இருக்குமாறு கூறியருளினர். இவரும் அங்ஙனமே போய்ப் பொதியிலில் இருத்தலும் புவியும் சமநிலை எய்தியதாம். இது கந்த புராணத்திற் கண்ட வரலாறாகும்.