உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


தத்துவராயர், சீர்பட்டர், ஈசான முனிவர் ஆயோரைப் பற்றி யெல்லாம் சொல்வது நல்ல வரலாற்றுப் பதிவாகும். தேடுதல் வேட்கையராகக் கற்பார் திகழச் செய்யும் வழிகாட்டுதலுமாகும். ‘ஏனெனின், அவ்வவ் வூரவரே அறியா நிலையில், 'வாழ்வறியா வாழ்வில்' அல்லவோ உழல்கின்றனர்.

ஆசிரியர் கல்வெட்டில் சீர்களும் எழுத்துகளும் உதிர்ந்து அவ்விடங்களில் புள்ளியிட்டுப் பதிப்பித்துள்ளமையால் (தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதி : 167) எவரேனும் அவ்வந்தாதியின் சுவடி வைத்திருப்பின் உதவுமாறு வேண்டியுள்ளார். 'பயன் பெற்றிரார் என எண்ண வேண்டியுள்ளது. பெற்றிருப்பின் 15 பாடல்களைப் பதிப்பித்தவர் முற்றாகப் பதித்திருப்பார் (154-155)

ஈழம் கொண்டான், கொல்லம் கொண்டான், கங்கை கொண்டான், கடாரங் கொண்டான் என்னும் விருதுப் பெயர்களைப் பலரும் அறிவர். ஆனால், ஏழிசைச் சூழல், ஏழிசைச்சங்கம் என்பவற்றைக் கொண்டிருந்த மாமதுரை மன்னன் தன் அரியணைக்கு 'இசையளவு கண்டான்' என்று பெயரிட்டிருந்த செய்தி தமிழிசைச் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம் (166) இசைத் தமிழ் வல்ல குலோத்துங்க சோழன் 1 மனைவி ‘ஏழிசை வல்லபி' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தமையும் நெஞ்சைப் பிணைக்கும் செய்தியாம் (167)

ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு

           ஆக்கையோ டாவியும் விற்றார்

தாங்களும் அந்நிய ரானார் - செல்வத்

           தமிழின் தொடர்பற்றுப் போனார்.

என்னும் நிலையில் நாடு ஆகியபோது, இளம் பிள்ளைகளுக்கு எழுத்தறிவித்துக் கல்வி கற்பித்து வந்தவர்கள் ஊர்தோறும் வாழ்ந்து கொண்டிருந்த வீரசைவப் பெருமக்களாகிய பாலாசிரியன் மாரேயாவர்” என்று ஆசிரியர் கூறுவது சிறப்பு நிலை; பொதுமை நிலை அவ்வவ் வூர்களில் வாழ்ந்து தமிழுக் கெனவே தம்மை ஒப்படைத்துத் திண்ணைப் பள்ளிகள் நடத்தியும், பழஞ்சுவடிகளைப் படியெடுத்தும், பாடம் சொல்லியும், சுவடிகளைப் பாதுகாத்தும் வந்த பெருமக்கள் அனைவரையுமே சாரும் என்பது தெளிவு. இளம்பாலாசிரியர் என்பார் சங்க நாளிலேயே