உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


ஒளவையார், ஒட்டக்கூத்தர் புகழேந்தியார் ஆயோரை ஒருகாலத் தவராக்கி ஒட்டிப்பாடவும், வெட்டிப் பாடவும் எதிராட்டு நிகழ்த்தவும் ஆகியவை பிற்காலப் புலவர்களின் புனைவு என அறியச் செய்கிறார் (198)

"பேராசிரியர் சுந்தரம்பிள்ளை 'அன்பு' பற்றி இயற்றிய பாடல்கள் சனவிநோதினி இதழில் (1891) வெளிவந்ததைச் செந்தமிழ் நேயர்களும்படித்துணருமாறு ஈண்டு வெளியிடு கிறேன்." என்பது, பிறர்புகழ் பரப்புதலுடன், நற்கருத்தை நாடறியச் செய்யும் நன் முயற்சியுமாம் (201)

தெலுங்கு மொழியில் முதலில் செய்யுள் இயற்றப் பெற்ற காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும் என்று கல்வெட்டுச் சான்றுவழியே உறுதி என்னும் ஆசிரியர், "ஆந்திரது தாய்மொழிப்பற்று நம்மனோர் நன்குணர்ந்து பின்பற்றுதற்குரிய தொன்று” என்கிறார் (209)

மேலும், "முதலில் செய்யுள் தோன்றிய காலம் யாதென ஆராய்ந்து காண முடியாத அத்துணைத் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நம்மனோர், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பெற்ற செய்யுளே இல்லாத தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஆந்திரர் பாற் காணப்படும் தாய்மொழிப் பற்றைப் பார்த்தாயினும் தாய்மொழித் தொண்டில் ஈடுபட்டு உண்மைத் தொண்டாற்று வார்களாக” என்கிறார் (210) இதனைத் தமிழ்ப் பொழிலில் 1931 1932 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார் என்பது எண்ணத்தக்கது.

சேனாவரையர் ஊர் பாண்டி நாட்டைச் சார்ந்தது என உய்த்துணரப்படுகிறது என்கிறார். பின் ஆய்வால் மட்டுமன்றிப் பாண்டி நாட்டார்க்கு நன்கு அறிமுகமானதும் கொற்கை சார்ந்ததுமாகிய ஆற்றூரிலே சேனாவரையர் கோயிலும் சிலையும் உண்டு.(211)

பழைய ஊர் ஒன்று கடல்கோளால் அழிவுற, அப்பெயரால் வேறிடத்து ஊர் அமைத்தல் வழக்கம் என்பதைக் ‘கொல்லம்' ஊர் கொண்டு நிறுவுகிறார் (214)