உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


திணையைப் பாடினார்போலும். சோழர் புலவராயிருந்து தமிழை வளர்த்த தோடு புலமை மிக்கோரியற்றிய நூல்களையும் போற்றி அப்புலவர்களைப் போற்றினார்கள். கரிகால் வளவனாகிய பெருவேந்தன் பட்டினப் பாலையென்னும் நூலை இயற்றிய ஆசிரியருக்குப் பதினாறு நூறாயிரம் பொன்னளித்துப் போற்றினமை காரணமாகக் கலிங்கத்துப் பரணியிற் புகழப்படு கின்றான். பொருநராற்றுப் படையென்ற நூலும் இவனைப் பற்றிப் பாடப்பெற்றதே. ஆகவே பத்துப்பாட்டு என்னுந் தொகைநூலுள் இரண்டு சோழருடையனவென்பது புலனாம். பாண்டியர் மேற் பாடப்பெற்றனவுமிதன் கணிரண்டேயுள. சோழன்கோச் செங்கணான் சேரனாகிய கணைக்காலிரும் பொறையைச் சிறைப்படுத்திய பொழுது பொய்கையார் என்ற புலவர் செங்கணானைக் களவழிக் கவிதையாற் பாடிச் சேரமானைச் சிறைவீடுசெய்தார். கோச்செங்கணான் என்ற சோழன் இவர் பாடிய நூலைக்கேட்டுத் தன் பகைவனைச் சிறையினின்று விடுவித்ததனால் அவனது தமிழ்ப் பற்று நன்கு புலனாகின்றது. பண்டைச் சோழர்கள் தனித் தமிழையே வளமுற வளர்த்தனர். பிற்காலச் சோழர் பல்லவராட்சியிற் பட்டுப் பிறமொழியை மிகுதியாக வழங்கினர். கி.பி. 750-ல் சோழநாடு பல்லவர்பாற்பட்டது. பல்லவர்கள் வடமொழியார்வத்தால் கோயிற்பூசனையில் அதனை நிலைநிறுத்தினர். அவரது ஆட்சியில் மதச்செயல்களே மல்கின. மதங்கருதிவந்த சமணர் முதலாயினோரும், 7, 8-ம் நூற்றாண்டுகளில் தமிழை வளம் படுத்தினர். விசயாலயனுக்குப் பின்வந்த ஆதித்தசோழன் காலத்தும் பராந்தகசோழன் காலத்தும் தேவாரத் திருமுறைகளைக் கோயில்களிற் பாடற்கேற்ற செவ்வியளிக்கப் பட்டிருந்தது. பின்னர் முதலாம் இராசராச சோழதேவரால் சைவத்திருமுறைகளிற் பதினொன்றும் கண்டு முறைப்படுத்தப் பெற்றன. இவன் காலத்துக் கண்டராதித்த சோழதேவரும், அவருடைய மனைவியார் செம்பியன் மாதேவியாரும் தமிழுடன் சமயத் தொண்டிலீடுபட்டுச் சைவத்திருமுறைகளை யெங்கும் பரப்பினார்கள். இக்காலத்தே இராசராசேசுவர நாடகம், இராசராசவிசயம் ஆகிய தமிழ் நூல்கள் தோன்றின. இராசராசன் மகனும் பண்டித சோழனும் ஆகிய கங்கைகொண்ட சோழன் காலத்தில்