உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


2. சோழன் கரிகாலன்
55 கி.பி.—95 கி.பி.

பண்டைக்காலங்களிற் சோழநாட்டை மிக்க நீதியுடனும் சிறப்புடனும் ஆண்டுவந்த சோழ அரசர்களுட் சிலர்சரிதத்தை, யான் அறிந்தவரை நம் நாட்டார்க்குத் தெரிவிப்பது என் கடமையாதலின், ஈண்டுச் சோழன் கரிகாலன் சரிதத்தை ஒருவாறு சுருக்கி எழுதப் புகுந்தேன்

இவ்வரசனை, சோழன்கரிகாலனென்றும், சோழன்கரிகால் வளவனென்றும், சோழன்கரிகாற்பெருவளத்தானென்றும், பழைய நுல்கள் கூறுக்கின்றன. ஆயினும். சோழவம்ச பரம்பரையிற் கரிகாலன் காலத்திற்குப் பின்னர், அவன் பெயரைத்தரித்த அரசர் பலரிருந்தன ரென்று தெரியவருகிறதினால், இவனைக், கரிகாலன் முதலாலாமன் என்றேவழங்கல் சாலப்பொருந்தும்.

உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னியின் அருமைப்புத்திரனாகிய இம்மன்னர் பெருமான் ஆட்சிபுரிந்தகாலம் கி.பி. 55முதல் கி.பி.95 வரையிலுமென்று ‘1800 ஆண்டுகட்குமுந்திய தமிழர்’ என்னும் நூலுடையார் கூறுகின்றனர். இதனை, மற்றைய பழஞ்சரித்திர வாராய்ச்சிவல்லாரும் அங்கீகரித்திருக்கின்றனர்.

இவ்வரசன் சிறுவனாயிருக்கும்போது காலில் நெருப்புப் பற்றிக் கால் வெந்துபோயிற்று. இக்காரணம்பற்றியே இவன் கரிகால னென்று வழங்கப்படுகிறான் போலும். இவன்காலில் நெருப்புப்பற்றிய விஷயம்,

“முச்சக்கரமளப்பதற்கு நீட்டியகா லிச்சக்கரமேயளந்ததாற் - செய்ச்செ
யரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்ப்புனனீர் நாடன் கரிகாலன் கானெருப்புற்று”

என்ற பழைய செய்யுளால் அறியப்படுகிறது.