உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


இவன் பால்யத்திலேயே சிங்காதனம் ஏறும்படி நேர்ந்தது. இவன் பட்டத்திற்குவந்தவுடனே ஓர் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு நியாய ஸ்தலத்திற்குத் தீர்த்துக் கொள்ளும்பொருட்டு வந்த இரு முதியோர்கள் தாம் நெடுந்தூரத்தில் வரும்போதே நியாய சபையில் ஓர் இளைஞனிருப்பதாக அறிந்து அவ்விளைஞனால் தம் வழக்கை நியாயமாய்த் தீர்க்கமுடியாதென்று சந்தேகித்தார்கள். அவர்கள் சந்தேகித்த விஷயத்தை ஒற்றர்கள் மூலமாக அல்லது வேறு எவ்விதமாகவோ அறிந்து கொண்ட கரிகாலன் அரண்மனைக்குள் விரைந்து சென்று கிழவனைப்போல் மாறுவேடம் பூண்டு கொண்டு சிங்காதனத் தமர்ந்திருந்தனன். பின்னர், நியாசபையை நோக்கி வந்தவிருவரும் சிங்காதனத்தில் வயதுமுதிர்ந்தவரசனே இருக்கிறானென்றுணர்ந்து தங்கள் வழக்கைத் தெரிவித்துக் கொண்டார்கள். இளைஞனாயினும் கூரியபுத்தியுள்ள கரிகாலன், அன்னவர்வழக்கை நன்றாய் விசாரித்து நியாயமளித்தனன். இச்செய்கை, இம்மன்னனது நுண்ணறிவையும், நீதிபரிபாலன மாண்பையும் நன்குவிளக்குவதோடு, குடிகள்மனம் எவ்வாறோ அவ்வாறே தான் நடந்து கொள்ளவேண்டுமென்ற எண்ணமும் அவனிடத்திருந்த தென்பதையும் புலப்படுத்துகிறது. இவ்வாச்சரியமான விஷயத்தை,

”இளமைநாணிமுதுமையெய்தி யுரைமுடிவுகாட்டியவுரவோன்”

என்ற மணிமேகலையானும்,

”உரைமுடிவுகாணா விளமையோ னென்ற
நரைமுதுமக்களுவப்ப - நரைமுடித்துச்
சொல்லான்முறை செய்தான் சோழன்குலவிச்சை கல்லாமற் பாகம் படும்”

என்ற பழமொழிச் செய்யுளானும் நன்குணரலாம். இவன்றன் ஆட்சிக்காலத்தில், காடுகளையழித்து நாடு உண்டுபண்ணி, பழைய ஊர்களைப் புதுப்பித்து, புதிதாக அநேகம் பட்டினங்களை ஸ்தாபித்து, அநேக குளங்களும் கால்வாய்களும் வெட்டி, அதனால் ஜலாதாரம் உண்டுபண்ணி, விவசாயிகளின்