உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

17


நீரினின்று ‘அடிவணங்கி ஆனைக்கா வுடையண்ணலே!தாங்கள் என் முத்தாரத்தை ஏற்றுக்கொள் வீர்களாக‘ என்றுவேண்ட, அம்முத்தாரமும் காவிரியினின்று கொண்டுபோகப் பட்ட திருமஞ்சனக்குடத்திலிருந்து திருவானைக் காவுடைய சிவபெருமான் மீது ஆரமாக வீழ்ந்து திகழ்ந்தது. இதனைச் செங்கணானும் ஏனையோரும் அறிந்து ஆச்சரிய முற்றனர். இவ்விஷயத்தை,

“தாரமாகிய பொன்னித்தண்டுறை யாடிவிழுந்து
நீரினின்றடி போற்றிநின் மலர்கொள்ளெனவாங்கே யாரங்கொண்ட வெம்மானைக்காவுடை யாதியை”

என்னும் ஸ்ரீமத் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கானு முணர்க.

இவ்வரசனதுகாலம்;- இவனைச் சைவசமயாசாரியராகிய திருஞானசம்பந்த சுவாமிகள் தமது பாசுரங்களிற் கூறியுள்ளாரென்பது முன்னரே தெரிவித்திருக்கிறேன். திருஞானசம்பந்த சுவாமிகள் கி.பி. 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவரென்று காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம் பிள்ளையவர்கள் நுண்ணிதின் ஆராய்ந்து வரையறுத்திருக்கின்றனர். ஆகவே சோழன் செங்கணானும் கி.பி 7-ம் நூற்றாண்டின் முன்னரேயிருந்திருக்க வேண்டும். கி.பி.4-ம் நூற்றாண்டிற்குமேல் 10-நூற்றாண்டு வரை பல்லவர்கள் என்னும் ஒருபராக்கிரமமுடைய வம்சத்தரசர்கள் சார்வபௌமச்சக்கிர வர்த்திகளாய், காஞ்சிபுரம், மாமல்லபுரம் முதலிய இடங்களை இராஜதானி நகரமாகக் கொண்டு அரசாண்டுவந்தன ரென்பதும், அக்காலங்களிற் சோழர்கள் தாழ்ந்தநிலைமையையடைந்து பல்லவர் கட்குக் கீழிருந்தார்களென்பதும் சிலாசாசனவாராய்ச்சியால் தெரிகின்றன. புறநாடுகளையும் வென்று தன்னாட்சிக் குட்படுத்திச் சிறப்புடன் அரசுவீற்றிருந்த வளவர்பெருமானாகிய செங்கணான் தன்னிராஜ்யத்தைப் பல்லவர்கட் கிழந்து இக்காலத்துத் தாழ்ந்த நிலைமையிலிருந்தானென்று சொல்லற் கிடமில்லை யாதலால் இவன் கி.பி.4-ம் நூற்றாண்டிற்கு முன்னரேயிருந்திருக்க வேண்டும். ஆனாற் செங்கணான் கி.பி. முதற் நூற்றாண்டிலிருந்த சோழன் கரிகாலனுக்குப் பிந்தியவ னென்பது யாவருமறிந்த விஷயம். கரிகாலனுக்குப் பின்னர் நான்கு சோழமன்னர்கள்