உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


4.அதிகமான் நெடுமானஞ்சி


இவன் கடைச்சங்கநாளில் தமிழகம் புகழவிளங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவனென்பது “முரசுகடிப் பிகுப்பவும்” என்னும் 158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப் படையில் 84 முதல் 122 வரையுள்ள அடிகளாலும் நன்கு விளங்கும். இவனை அதியமான் நெடுமானஞ்சியெனவும், நெடுமானஞ்சி யெனவும், அஞ்சியெனவும், எழினி யெனவும் வழங்குவர். இவ்வள்ளலைப்பற்றிய சரித்திரமுழுவதும் அறியவிடமில்லையேனும் பழையநல்லிசைப்புலவர்கள் இவன் விஷயமாகப் பாடியுள்ள செய்யுட்கள் இவன்வரலாற்றைச் சிறிது அறிதற்கு உதவியா யிருத்தலோடு இவனதுபெரிய கொடைச் சிறப்பையும், மிகுந்தபோர் வீரத்தையும் அரியகுணங்களையும் இக்காலத்தார்க்கு நன்குபுலப்படுத்துகின்றன. இவன்[1] மழவர் என்னும் ஒருக்கூட்டத்தார்க்கு அரசனென்பது “ஓங்குதிற லொளிறிலங்கு நெடுவேன்மழவர் பெருமகன்” (புறம்.88) எனவும் “வழுவில்வண்கை மழவர் பெரும” (புறம். 90) எனவும் புறநானூற்றில் வருதலாற்றெரியலாம். இவன் ஊர்தகடூரென்பதும். மலை குதிரைமலையென்பதும் 230, 158 ம் புறப்பாடல்களால் முறையே அறியப்படுகின்றன. இவன் வெட்சிப்பூவையும் வேங்கைப்பூவையும் அணிவோன்; இவனுக்குரிய மாலை பனைமாலையாகும் (புறம். 99). புறநானூற்றுரையாசிரியர், ”இவனுக்குப் பனந்தார்கூறியது சேரமாற்கு உறவாதலின்” என்று 99- ம் புறப்பாட்டினுரையிற் குறித்திருப்பதனால் இவன் சேரர்களுக்கு உறவினனென்பது அறியக்கிடக்கின்றது. இவன்

-


  1. இவன் வழித்தோன்றல்களே பிற்காலங்களில் 'மழவராயன்' என்னும் பெயர் புனைந்த சிற்றரசர்களாகவும், மந்திரிகளாகவும், சோழசக்கரவர்த்திகளின் கீழ்த் தென்னாடுகளில் இருந்து வந்தனரென்று தெரிகிறது. தற்காலத்திலும் இப்பெயர் புனைந்தோர் சிலர் தஞ்சை திருச்சிமுதலிய ஜில்லாக்களில் வசிக்கின்றனர். இவர்களெல்லாம் மேலே சொல்லப் பட்டவர்களின் வம்சத்தினர்களென்ற புராதனசரித்திர ஆராய்ச்சி செய்யும் அறிஞர் பலரும் கருதுகிறார்கள்.