உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

vii


நாட்டில் உள்ளது என்பது கல்வெட்டால் புலப்படும். இதற்கு அண்மையில் இரண்டு மைலில் மிழலை என்று அழிந்த ஊர் ஒன்று உள்ளது. இஃது இப்பொழுது கும்பகோணத்தில் இருந்து நான்கு மைல் தூரத்தில் சென்னைக்குப் போகும் பெருவழியில் உள்ளது. யாம் நேரிற் சென்று அதனைப் பார்த்த போது அழிவுற்ற நிலையில்உள்ள ஒரு பழைய சிவாலயம் அங்கே காணப்பட்டது" (103) என்றும்,

"ஏர் என்னும் திருக்கோயிலுக்கு யான் சென்று பார்த்த போது அது பழமை வாய்ந்த ஒரு சிவாலயம் என்று துணிதற்குரியதாக இருந்தது”(105) என்றும், இன்னவாறு கட்டுரைகளில் குறித்துச் சொல்லுதலும், அவற்றைப் பற்றியும் அவற்றின் நிலையைப் பற்றியும் குறிப்பிடும் செய்திகளை அறியும் போதும் சதாசிவனார் எடுத்துக் கொண்ட ஆர்வ முயற்சியின் அளவு புலப்படும். ஆசிரியர் தாம் எழுதுகின்ற பெருமக்களை அயன்மைப்படுத்திக் காணாமல் அகப்படுத்திக் காண்பாராய் 'நம்' கண்டராதித்தர், 'நம்' கரிகாலர் என்பது, அவர் பெரு மக்களை மதிக்கும் மதிப்பீட்டு விளக்கமாகி நம் சதாசிவமாகத் திகழ்பவராகிறார். அதியர் என்னும் குடியில் வந்தவர் அதியர்; அவ்வழியினன் அதியமான். அவன் ‘அதிகமான்' எனப்பட்டது, வையை ‘வைகை' யாகியது போன்ற வழுவே.

இந்நாளில் தருமபுரி என வழங்கப்படும் ஊரே, பழந்தகடூர் என்பது தெளிந்த செய்தி. அக்குடியின்பின் ஆய்வுச் செய்திகள் அறிய முடியா நிலையில் வரலாறு இடர்ப்படுதல் கண்கூடு (24,25) அக்காலத்தில் அச்சான்றுகள் கிடைத்தில என்பது புலப்படுகிறது.

வரலாற்று அறிஞர் து.அ.கோபிநாதராயர், திருவிசைப்பாப் பாடியவர் இரண்டாம் கண்டராதித்தர் என்பதை மறுத்து, முதற் கண்டராதித்தரே என்பதை நிறுவுகிறார். திருவிசைப்பாவிலுள்ள இராசராசேச்சுரப் பதிகம் கருவூர்த் தேவர் பாடியது என்றும் தெளிவிக்கிறார். (36) முதல் இராசராசன் காலத்திற்கு முன்னர்ச் சோழமண்டலம் பலநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததேயன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்படவில்லை. அவ்வாறு ஒன்பது வளநாடுகளாகப் பிரித்தவன் முதல் இராசராசனே என்கிறார் (89)