உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இவ்வாறு அண்ணா அவர்கள் 1965ஆம் ஆண்டு மாநிலங்கள் அவையில் பேசியதையும், 1996இல் திருச்சி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பின்பற்றிக் கழக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது அதனை வலியுறுத்தி; பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு 3-3-2000 அன்று எழுதிய கடிதத்தில், "தமிழையும், ஏனைய மொழிகளையும், இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கு ஏற்றவகையில், அரசியல் சட்டத்தில் மத்திய அரசு இன்னும் திருத்தம் செய்யவில்லை என்ற மனக்குறை தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு. தமிழக மக்களின் இந்த உண்மையான உணர்வுகளை நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்வீர்கள். எனவே நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என்று கேட்டுக் கொண்டேன். கழகத்தின் இந்த முக்கியமான மொழிக் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் விழுப்புரம் மாநாட்டுத் தீர்மானம். அதே தீர்மானத்தில் தமிழ்மொழியை மத்திய அரசு செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோரிக்கையும் பல ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் சார்பாக தி.மு.கழகத்தின் வாயிலாக கூறப்பட்டு வருகின்றது. ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட எத்தனை தகுதிப்பாடு தேவை என்பது குறித்தும், அவை அத்தனையும் பொருந்திய மொழி தமிழ் என்பது குறித்தும், மாநாட்டிலேயே நான் தெளிவாக விளக்கி உரையாற்றியிருக்கிறேன்.