உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிரிவு 309ன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், பிரிவு 311ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களுக்கு முரணாகவும் பிறப்பிக்கப்பட்ட இந்தச் சட்டம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகவும், அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவும் அமைந்துள்ளதோடு, இயற்கை நியதிகளுக்கு மாறானதாகவும் இருந்தபோதிலும்; அவசரச் சட்டம் பற்றிய முடிவு எதுவும் நீதிமன்ற வாயிலாக இதுவரை வராதது குறிப்பிடத்தக்கது. 311 எஸ்மா சட்டம், டெஸ்மா அவசரச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள், இந்திய அரசியல் சட்டம், பிரிவு 14, 20, 309, ஆகியவற்றுக்கு எதிரானது. பிரிவு 311(2)ன்படி, ஒரு ஊழியருக்கு அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்காமலும், அதனை அவர் மறுத்து விளக்கம் தர வாய்ப்பு தராமலும், அவரை வேலை நீக்கம் செய்யவோ, அவரைப் பதவி இறக்கம் செய்யவோ கூடாது. தண்டனை தருகின்ற சட்டத்தை முன்தேதியிட்டு அமலுக்கு வந்ததாக அறிவிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. ஆனால் டெஸ்மா சட்டம் பல மாதங்களுக்கு முன்தேதியிட்டு நிறைவேற்றப்பட்டதாக அவசரச் சட்டம் கூறுகிறது. தமிழகத்திலே அரசு அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பகரமான நிலை குறித்து, 7-7-2003 அன்று பிரதமர் அவர்களுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதி, மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர். பாலு அவர்கள் மூலமாக கொடுத்தனுப்பினேன். பிரதமரும் அவரிடம்; தமிழகத்திலே நிலவும் மோசமான நிலை குறித்து அறிவேன் என்றும், உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். மீண்டும் ஒரு முறை 17-7-2003 அன்று பிரதமருக்கு இந்தப் பிரச்சினையை நினைவூட்டி ஒரு கடிதம் எழுதினேன்.