பக்கம்:துங்கபத்திரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

மனத்துடன் ஒப்புக்கொண்டது. கூண்டில் நின்ற மகமதிய வீரன் அப்போதும் வாய் நெளியாமல் சிரித்தான். சிரிக்கச் சிரிக்க ராயர் முகம் சிவந்துகொண்டே வந்தது.

தளபதி சிங்கராயன் கண்களில் ஆவேசம் கொப்பளித்து நின்றது. "சக்கரவர்த்தி, இவன் பைத்தியம்போல் நடித்து பரிதாபத்திற்குள்ளாகப் பார்க்கிறான். இவனைப் பரிசோதிக்க வேண்டும். என்று இரைந்து பேசிவிட்டு குற்றவாளியின் ஆடைகளைப் பரிசோதித்தான் சிங்கராயன். சபை சிங்கராயனின் துணிகரச் செயலை மிகுந்த அக்கறையுடன் கண்காணித்தது. சிங்கராயன் குற்றவாளியின் ஆடைகளைப் பார்த்துவிட்டு அவனுடைய கையுறைகளைக் கழற்றினான். அதிலிருந்து இரண்டு வெள்ளித்துண்டுகள் 'கணீர்' என்று தரையில் விழுந்தன."அரசே பார்த்தீர்களா? நமது சாம்ராஜ்யத்தின் மானம்! பம்பாவதி கோயிலில் எழுந்தருளி இருக்கும் நமது மூலவர்களின் மூக்குகள்!" என்று கனல் தெறிக்க முழங்கினான்.

அமைதியே உருவான அரியநாதனுக்குக்கூட கோபம் பீரிட்டு விட்டது. "பெருமானே இந்தக் கொலைகாரன் நெடுநாட்கள் இங்கு தங்கி இந்தக் கொடுஞ் செயலைப் புரிந்திருக்கிறான், இன்னும், இவனை விசாரிக்க வேண்டும். இவன் சதிக்கு உடன்பட்டு துணைபுரிந்தவர்கள் அனை வரையும் தண்டிக்க வேண்டும். ஒருவன் தப்பினாலும் நமது விஜயநகர அரசு விஷம் கலந்த பாலாகிவிடும்" என்று வேண்டுகோள் விடுத்தான் அரியநாதன். விசுவநாத நாயக்கன் செவிகளில் இந்த உரைகளெல்லாம் ஏறவில்லை. சபையின் நடவடிக்கைகளுக்கு வெகுதூரத்திற்கப்பால் அவனுடைய சிந்தனை விளையாடிக் கொண்டிருந்தது. அரச காரியங்களில் அழைப்பின்றித் தலையிட்டு ஆலோசனைகள் கூறும் பண்டிதமணியைப் பற்றித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/25&oldid=1507352" இலிருந்து மீள்விக்கப்பட்டது