பக்கம்:துங்கபத்திரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

திருமணம் புரிந்து கொள்ளலாம், என்று பரிசு வைக்கலாம். உலகில் இதுவரை எங்கெனும் இதுமாதிரி எந்த அரசாங்கமும் வைத்ததில்லை" - என்று அமைதியாகத் தெரிவித்தான் அரியநாதன். நறுக்குத் தெரித்ததுபோல் முகத்தைச் சுழித்துப் பேசி அவனுக்குப் பழக்கமில்லை. கருமை ஏறாத அருகம் புல்லைப் போன்ற இளமீசைப் பருவத்தில் உள்ள அவன் துணைக்குத் துணையாக இருந்த தோழன் விசுவநாதனை துங்கபத்திரைக் கரைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் கிடந்து தத்தளித்துக் கொண்டிருக்கும்போது அவன் தொண்டையில் உரம் எப்படிச் சுரக்கும்! பிள்ளைப் பூச்சியின் ஓட்டத்தைப் போல் அவன் பேச்சு முட்டி மோதி வெளிக் கிளம்பியது.

மன்னர் முகத்தில் இன்பக்குறிக்களை அரும்பியது. அரியநாதன் கருத்தில் புதுமை இருப்பதுபோல் அவருக்கும் பட்டது. துர்ஜதியைப் பார்த்தார். கருத்துத் தெரிவிக்காமல் இருந்தவர் அவர் ஒருவர்தான். அதுவரை பிடித்து வைத்த பிள்ளையாரைப் போலிருந்த துர்ஜதியும் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்து விட்டார். அரியநாதன் தெரிவித்த கருத்து அவருக்குத் திசை காண்பித்து விட்டதுபோல் தோன்றியது. புறாவுக்கு விரித்த வலையில் புள்ளிமான் விழுந்ததுபோல் இருந்தது. தென்புடன் பேசினார். "அரியநாதன் வெளியிட்ட கருத்தில் திருத்தம் - சிறு திருத்தம். மல் யுத்தப் போட்டியில் கலந்து கொள்பவன் திருமணமாகாதவனாக இருக்க வேண்டும். அவன் விஜய நகர சாம்ராஜ்ஜியப் பிரஜையாகவும் இருக்க வேண்டும். மணமாகாத குமரிப்பெண் அவனுக்குப் பரிசு. அரசாங்கம் கண்டிப்பான உத்தரவிட்டு விஜய நகரத்தில் உள்ள கன்னிப் பெண்கள் அனைவரையும் அன்று அரசசபைக்கு வந்திருக்கச் செய்ய வேண்டும்!" இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் துர்ஜதி.

சக்கரவர்த்தி ராயருக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்தமானதாக இருந்தது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும்படி சபைக்குச் சிபாரிசு செய்தார். சபை அங்கீகரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/62&oldid=1523642" இலிருந்து மீள்விக்கப்பட்டது