பக்கம்:துங்கபத்திரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

காலை புலர்ந்தது. நாடெல்லாம் பேரிகை முழங்கியது. வாழ்த்தாத இதயமெல்லாம் மன்னரை வாழ்த்தியது. அவர்களில் கட்டிளம் காளையர்களும் இருந்தார்கள். பெட்டிப் பாம்பாய் வீடுகளுக்குள் சிறை இருந்த பெண்களும் இருந்தார்கள்.

பிறந்த வீட்டில் பிரிவு உபசாரத்திற்கும், புருஷன் வீட்டில் அன்பழைப்பிற்கும் இடையில் நீந்தும் விஜயநகரப் பட்டுப் பூச்சிகளுக்கு, மன்னரின் பரிசுத் தீர்மானம் கனவுலகைத் திறந்து விட்டது. பெயர் பெற்ற மல்யுத்த வீரர்களின் உருவங்களெல்லாம் அவர்களின் கனவு ராஜ்ஜியத்தின் கதாநாயகர்களாகத் திகழ்ந்தார்கள். உண்மைக்கும் கனவுக்கும் இதுதான் வேறுபாடு. வாழ்க்கையில் எல்லோருடைய எண்ணங்களும் வெற்றி பெறுவதில்லை. கனவில், நினைத்தவர்கள் எல்லாம் நினைத்தபடி வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை சுரங்கத்துத் தங்கம். கனவு தங்கநிற மேகத் திரள்.

***

"கங்கா !... கங்கா" மாளிகைக் கதவைத் தட்டினார் துர்ஜதி. அவர் முகத்தில் வெற்றிக்களை திருநடனம் புரிந்தது. இளமையின் ஒவ்வொரு துடிப்பும் அவருக்கு எதிர் காலப் பலனை உணர்த்திக் கொண்டிருந்தது.

கங்கா கதவைத் திறந்தாள்.

"கங்கா!"

"அப்பா"

"காலத்தின் மகாத்மியம் என்ற நூலை தீட்டினேனே அப்போது கூட நான் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்ததில்லை. இன்று எனக்கு அவ்வளவு இன்பம்."

"என்னப்பா இன்று இவ்வளவு சந்தோஷம்! இளவரசியின் காதல், மன்னர் காதுக்கு எட்டி விட்டதா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/63&oldid=1523988" இலிருந்து மீள்விக்கப்பட்டது