பக்கம்:துங்கபத்திரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அவனுடைய அருமைத் தோழன் இளவரசியின் காதலிலிருந்து மீளுவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தான். நான் இதை உனது எதிர்காலத்திற்காக பயன் படுத்திக் கொண்டேன். என் மனதிலே இப்படி ஓர் எண்ணம் இருக்கிறது என்று அரியநாதனுக்குத் தெரிந்திருந்தால் இந்தப் பரிசுத் திட்டத்தையே தகர்த்து எறிந்திருப்பான் அவன் சூரன். கவனம் இருக்கட்டும். நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. விசுவநாதன் மேல் நம் நாட்டில் பல பெண்கள் குறி வைத்திருக்கிறார்கள். அவன்தான் வெற்றி பெறுவான் என்று எல்லோரும் நினைப்பது நியாயம்தான். சோளக் கொல்லைப் பொம்மை போலிருக்கும் சோணங்கிகள் கூட கவர்ச்சிகரமாக அலங்கரித்து வருவார்கள். கங்கா உனக்கு அவனைத் தெரியும். அவனும் உன்னைப் பார்த்திருப்பான். சாதுர்யமாக நடந்து கொள்! மயிலுக்கு ஆடக் கற்றுக் கொடுப்பதில்லை, பூவுக்கு மலரப் போதிப்பதும் கிடையாது!" துர்ஜதி முடித்தார்.

கங்கா கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் இட்டிருந்த கண் மை இழகி ஓடியது.

***

துங்கபத்திரா நதிக்கரையில் பருவதம் போல் விளங்கிய விட்டலசாமி கோயிலின் கல்லரண் ஓரத்தில் விசுவநாதன் முகாம் அமைத்திருந்தான். இருபதுக்குக் குறையாத அழகிய வர்ணக் கூடாரங்கள் மணற் படுகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போடப் பட்டிருந்தன. தலைநகரிலிருந்து வரும் அரண்மனைச் சேவகர்களுக்கு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு கூடாரம் மட்டிலும் இரு வண்ணத்திரையால் அமைக்கப்பட்டிருந்தது. அதுதான் விவசுநாதனின் கூடாரம். அதில்தான் அவன் எப்போதும் இருப்பான். அருணோதயத்திற்கு முன் எழுந்து ஆறு கல் தூரம் அவனது வெண்புரவியில் ஏறி வேகம் காட்டிப் பறப்பான். கரையோரத்து கரிய கொழுந்து மணல் குதிரையை பிடித்து விடுவதுபோல் மேலெழுந்து பரவும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்ப்பான். அந்நியர் அரவம் தட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/66&oldid=1524558" இலிருந்து மீள்விக்கப்பட்டது