பக்கம்:துங்கபத்திரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

படுகிறதா என்று கண்காணிப்பது தானே அவனது முதற் பணி. எதிர்க்கரையில் எறும்புபோல் உருவம் தெரிந்தாலும் உறங்க மாட்டான். இடுப்பில் தொங்கும் குழலை எடுத்து ஊதி விடுவான். அதுகேட்டு கோயிலடிவாரத்தில் முடங்கிக் கிடக்கும் படை வீடு துணுக்குற்று அணிவகுத்து நிற்கும். எதிரியின் எண்ணத்தை நோட்டம் கண்டு சொல்லும் அறிவிப்பாளர்கள் விட்டலசாமி கோயிலின் மூல கோபுரத்தின் சிகரத்திலிருந்து வழியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். விசுவநாதன் இந்த அரும்பணிக் குழுவினருக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து அவன் நிலை உயர்ந்தது. விஜயநகரத்தில் அவனுக்கு மரியாதை விரிந்தது. பருவம் கடந்த புகழ் என்று பேசாதவர்கள் இல்லை.

அன்று இரவு அவன் எதிர்ப்பார்க்கவில்லை. நடு நிசியில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டது. காவல் முறைக் காரர்கள் வேலும், வாளும் ஏந்திய வண்ணம் கூடாரங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

குளம்படி ஓசை வரவர நெருங்கிக் கொண்டிருந்தது விசுவநாதன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள். இரும்புக் கவசம் பூட்டி எறிவாளைக் கையிலெடுத்துக் கொண்டு கூடாரத்திற்கு வெளியில் வந்து நின்றான். கோபுரத்தில் இருந்த அறிவிப்பாளன் அங்கிருந்தபடியே குரல் கொடுத்தான். வெள்ளைக் குதிரை ஒன்று தன்னந் தனியாக மழை வேகத்தில் வருகிறது. குதிரையிலிருப்பவன் கையில் தீப்பந்தம் வைத்திருக்கிறான்' என்றான் அந்த அறிவிப்பாளன்.

விசுவநாதன் அவனுடைய குதிரைமீது ஏறி நின்றபடி ஏறிட்டுப் பார்த்தான். வெகு தூரத்தில் தீப்பொறி பறப்பது மட்டும் தெரிகிறது. இந்தக் குதிரை எதிரிகளின் வடதிசைப் பக்கமிருந்தும் வராமல், தலைநகர் பக்கமிருந்தும் வராமல், கீழ்கோடியிலிருந்து வந்துகொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/67&oldid=1524559" இலிருந்து மீள்விக்கப்பட்டது