பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தும்பைப் பூ


லாமெ கொள்ளாமெ கூட எங்கேயோ போயிட்டியே சித்தி!..."

குழந்தையின் பகிரலாபம் மங்கையை மேலும் உருக்கி விட்டது.

"நான் எங்கேயும் போகவில்லையடா, ராஜா! உன்னை விட்டுலிட்டு இனி எங்கேயும் போகமாட்டேண்டா, கண்ணு ...... நீ நல்லபடி ஆகிவிட்டால் போதும்" என்று சொல்லியவாறே அவனை உச்சி மோந்து முத்தமிட்டாள். அவளுடைய மென் கரங்கள் கணேசனுடைய உடம்பைப் பரிவோடு வருடலாயின.

"என்னை விட்டுவிட்டு மறுபடியும் போயிடமாட்டியே? சித்தி !.... !"

மீண்டும் கணேசனின் பிஞ்சு உள்ளம் பேசியது.

"ஊஉம். போகவே மாட்டேன். உன்னை விட்டுவிட்டு ஒரு இடத்துக்கும் போகமாட்டேன். ஒரு கணமும் பிரியமாட்டேன், கண்ணு!" என்று கன்னத்தைக் கிள்ளியவாறு கொஞ்சலாகச் சொன்னாள்.

கணேசன் மங்கையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, "சித்தி! நீ இல்லாதே போகவே எனக்கு என்னவோ போலிருந்தது, சித்தி! ஒரு இராத்திரி பூதம்போல் ஒன்னு வந்து என்னை மருட்டிச்சி, சித்தி! நீ இருந்தா அதை அடிச்சித் துரத்திருக்கமாட்டே?...அம்மாவைக் கூப்பிட்டா வரவே இல்லை, சித்தி!" என்று மழலை ததும்ப மொழிந்தான்.

"அப்படியா! இனிமேல் நீ எதற்கும் பயப்படாதே; நான் இருக்கிறப்போ, பூதம் பிசாசு எதுவும் உன்னண்டை வராது" என்று மங்கை குழந்தைக்குத் தைரியம் சொன்னாள்.

இச் சோகக் காட்சியை எல்லோரும் தூர இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கோகிலா மட்டும் தான் மங்கையின் :பக்கத்தில் இருந்தாள்.