பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

137


காங்கிரஸில் இருந்துதான் மக்களுக்குச் சேவை புரிய முடியுமா? என்ன வேறு எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்து சேவைசெய்யமுடியதா? நீண்டகாலம் காங்கிரஸ்ஸில் இருந்து தொண்டாற்றி வந்ததால், பிற கட்சிகளில் சேர விருப்பமில்லையென்றால், தனிப்பட்ட முறையில் முடிந்த அளவு மக்களுக்கு நன்மை செய்து மனத்திருப்தி கொள்வதுதானே! அதை விட்டு......... பொல்லாதவர்களுடன் பொல்லாங்கு எதற்கு? நாய் வாலே நிமிர்த்த முடியுமா? துஷ்டர்களுக்குப் புத்தி சொன்னால் திருந்தப்போகிறார்களா? அதற்குப்பதிலாக அவர்கள் தீமை செய்யத்தான் பார்ப்பார்கள். தங்க இடமின்றி மழையில் நனைகிறதே என்ற பரிவுணர்ச்சியோடு புத்தி சொன்ன தூக்கனாங் குருவியின் கூட்டைப் பிய்த்தெறிந்த குரங்கின் கதையை இவர் அறிய மாட்டாரா? இவருக்குத் தெரியாத விஷயமா? இவருக்கு யோசனை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?-மனைவிக்கு உரிமையா? இல்லாத உரிமையிருக்கலாம். அந்த உரிமையை எப்பேர்ப் பட்ட கணவரிடம்-எந்த சமயத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிய வேண்டாமா.........?'

கணவனிடத்தில் திலகவதிக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு; உயர்ந்த மதிப்பு உண்டு. இடையில் மங்கை விஷயமாக அவள் சந்தேகங்கொண்டபோது கூட, கணவன்மீது கடுகளவும் ஐயங் கொள்ளவில்லை. மங்கைமீதுதான் சந்தேகங் கொண்டாள்; அசூயை கொண்டாள். அவள்தான்-இளமையிலேயே இன்பத்தை இழந்துவிட்ட விதவையான அவள் தான் தன் கணவரை மயக்க முயல்கிருள் என்று எண்ணினாள்.

தன் கணவர் அனுபவ மிகுந்தவர்; அவர் நிலைமைக்குத் தகுந்தபடி நடந்து கொள்வார்; அவரைப் பற்றித் தான் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 'அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்களின்-அதிகாரத்தைக் கைக் கொண்டிருப்பவர்களின்-பகைமை எதற்கு?’ என்ற ஒரு சிறு நினைவைத் தவிர அவள் அவரைப் பற்றி அதிகஞ் சஞ்சலங்

து-9