பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

139


பிள்ளைகளின் வெளி விவகாரம் பகிரங்கமாகத் தெரிந்த பின்னர் திலகவதிக்குப் பயம் அதிகமாய் விட்டது. விசுவம் தி.மு.க.வில் சேர்ந்திருப்பதுகூடப் பாதகமில்லை. சிவன் போய் அந்தச் சதிகாரக் கட்சியில் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதுதான் எனக்கு மன வேதனையாயிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் பலாத்கார முறையை விட்டு விட்டார்கள், வேலைத் திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதைச் சட்ட ரீதியான கட்சி, நேர்மையான அரசியல் கட்சி என்று நம்மால் நம்ப முடியாது. அரசாங்கமும்-மத்திய அரசாங்கங்கூடத்தான்-அதை நம்பாமலேயிருந்து வருகிறது. இந்நிலையில் இவன் போய் அதன் நடவடிக்கைகளில் கலந்து கொள்வது-அல்லது அநுதாபங் காட்டுவது கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையைச் சொரிந்து கொள்வது போலல்லவா ஆகும்?......' என்று ஒரு நாள் கணவர் தம் நண்பரொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் வேதனை இவள் நெஞ்சத்தைத் துளைத்தது. மாசிலாமணி முதலியார் அன்றொரு நாள் எச்சரித்தது போல், இன்று ஆட்சி பீடத்திலிருக்கும் தன் கணவனுக்கு வேண்டாதவர்கள், இவர் மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, சிவனை அரசாங்கத்துக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான் என்று ஏதாயினும் காரணங் காட்டிச் சிறையில் தள்ளி விட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஏங்கினாள். இப்பயங்கர நினைவு அவளைப் பாகாய் உருக்கிவிட்டது.

அவள் கணவர் சமீபத்தில் பழநிசாமிப் படையாச்சியிடம் தெரிவித்ததுபோல், சிவன் சிறு பையனுயிருந்தாலும் இரண்டு அறை அறைந்து அதிலெல்லாம் சேராதே என்று பயமுறுத்திப் புத்தி சொல்லலாம்; தலைக்கு மேலே மூத்துவிட்ட பிள்ளையை எந்த விதமாகக் கண்டிப்பது? மிஞ்சிக்கண்டித்தால் மீறி விட்டால் என்ன செய்வது? கொஞ்ச நஞ்சமுள்ள மரியாதையுமல்லவா கெட்டுப் போகும்? ஆகவே, கணவன்