பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தும்பைப் பூ

15

கட்டிடங்களைப் பற்றியும் ஓட்டல்கள், சினிமாக் கொட்டகைகளைப் பற்றியும் மட்டும் மகளுக்கு விவரித்தாள்.

இவர்கள் சாந்தோம் ஹைரோட்டிலுள்ள ஒரு வீட்டுக்குப் போக வேண்டுமென்று தெரிவித்ததால், ஜட்கா வண்டிக்காரன் ஊரைச் சுற்றிக்கொண்டு போகாமல், நேராக வாலாஜா ரோட் வழியாக வண்டியை ஓட்டிக் கொண்டு போய் மெட்ராஸ் கிரிக்கெட் மைதானம், பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மெண்ட் கட்டிடம், செனட் ஹவுஸ் முதலியவைகளைக் கடந்த தெற்குத் திசையாகத் திரும்பிக் கடற்கரைப் பாதையில் ஓட்டலானன்.

வண்டி சென்னை பல்கலைக்கழகக்கட்டிடத்தை நெருங்கும் போதே, பரந்து விரிந்திருக்கும் கருங்கடலைக் கண்டுவிட்ட மங்கையர்க்கரசி, “இதென்னம்மா, இது!” என்று பேராச்சரியத்துடன் கேட்கலானாள்.

“இதுதான் சமுத்திரம் நான் முன்னே சொல்லலையா?” என்று பதிலளித்தாள் சிவகாமியம்மாள்.

“நம்ம காவேரி ஆற்றைவிடப் பெரிதாக இருக்கிறதே! அகண்ட காவேரியில் வெள்ளம் வந்தால் இருப்பதைப் போல......”

“அடிப் பயித்தியக்காரப் பெண்ணே இந்தச் சமுத்திரம் எங்கே? காவேரி எங்கே? காவேரியைப்போல நூறு காவேரி ஒன்று சேர்ந்தாலும் இவ்வளவு பெரியதாயிருக்காதே! நீ என்னான்னா......” என்று சிவகாமியம்மாள் அதற்குமேல் கடலைப் பற்றி விவரிக்க முடியாமல் நிறுத்தினாள்.

‘உம்’ என்று பெருமூச்சு விட்டவாறு மெளனமாக, வான முகட்டைத் தொட்டுக்கொண்டு கண்ணுக் கெட்டும் தூரம் வரை பரவியிருக்கும் நீலக்கடலின் அழகையும், காலைக் காட்சியையும் பார்த்துக் கொண்டே போனாள்.