பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

67


அதற்குள் மங்கை தன் சேலை முந்தானையால் கண்ணைத் துடைப்பது போல் கசக்கிக் கொண்டு இருந்தாள்.

கோகிலா தன் தளிர்க் கரங்களால், கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசியின் கைகளை விலக்கிவிட்டு, அவள் முகத்தைத் தாழ்த்திப் பிடித்து செவ்விதழைக் குவித்து ஊதலானாள். அப்போதும் விதிர் விதிர்ப்பு அடங்காத மங்கையின் முகம் கோகிலாவின் இச் செயலைக் கண்டு நாணத்தால் குப்பெனச் சிவந்தது. அவளுடைய சங்கடமான நிலையைக் கண்டு சதானந்தம் பிள்ளை மெல்ல அவ்விடத்தை விட்டு அகன்றார். அவருக்கும் பட படப்பு நீங்கவில்லை. உணர்ச்சியின் உந்துதலால், மங்கையிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது தம் தகுதிக்கும் வயதுக்கும் சரியல்ல என்று அவர் உள்ளம் இடித்துக் கூறியது. தாம் ஒழுங்கு மீறியதால் தானே, தம் பிள்ளைகளைக் கண்டும் பலப்படவேண்டியதாயிற்று என்று அவர் கருதி மனம் நொந்தார். 'மங்கை பால் தம் மனம் சலனங் கொண்டது ஏன்?' என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். சந்தர்ப்ப உணர்ச்சியோ என்று அவர் எண்ணிப் பார்த்தார் சிறிது நேர சிந்தனை; 'இது சந்தர்ப்ப உணர்ச்சியல்ல; சில காலமாகவே, உள்ளத்தை உலுப்பிவரும் கிளர்ச்சிதான். மங்கை வந்த சில நாளிலிருந்தே நம் நெஞ்சம் அவள் பால் நெகிழ்ச்சியுற்று வருகிறது' என்ற உண்மையை அவருக்கு அறிவுறுத்தியது. "இதற்குக் காரணமென்ன?" என்று யோசித்தார். 'மங்கையின் இளமையா? அல்லது அழகா? இல்லை; மிக இளம் பருவத்திலேயே விதவையாய் விட்டாளே என்று அவள் மீது ஏற்பட்ட இரக்கமா? அதுவுமில்லா விட்டால், மைத்துனி முறைப் பெண் என்ற உறவா?' அச்சமயம் அவரால் எல்வித முடிவுக்கும் வர முடியவில்லை. எது காரணமாயிருந்தாலும், மங்கையிடம் ஒழுங்கு மீறி உரையாடுவதோ, உறவு கொண்டாடுவதோ நம் பெருந்தன்மைக்குச் சிறிதும் பொருத்தமல்ல. நாம் இதுவரை பிற பெண்களை ஏறிட்டும் பார்க்காது ஆண்மையைக் காத்து வந்தது